பரந்த பூ மழை- தேவர்கள் பொழிந்த மலர்; பந்தரைக் கிழித்தது - பறவைக் கூட்டப் பந்தலைக் கிழித்துக் கொண்டு கீழே வீழ்ந்தது; அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன - வானத்திலிருந்து துந்துமி வாத்தியங்கள் மேகங்களைப் போல முழங்கின; இந்திரன் முதலிய அமரர் ஈண்டினர் - இந்திரன் முதலான தேவர்கள் வானவீதியிலே வந்து திரண்டனராய்; சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார் - அழகிய வில்லாளனாகிய ராமனைத் தொழுது வாழ்த்தினார்கள். கிழித்தன: கிழித்துக் கொண்டு கீழே இறங்கின என்பது பொருள். பூமழை: மழை மிகுதிப் பொருளைத் தந்து நின்றது. துந்துமி - தேவர்கள் இசைக்கருவி. ஈண்டுதல்: கூடுதல் (திரள்தல்). சுந்தரம்: அழகு. வில்லி: வில்லை உடையவன். தொழுது: வணங்கி. வாழ்த்தினர்: துதித்தனர்: அரக்கர்களால் அல்லலுற்ற தேவர்கள் அவ்வல்லல் தீர்ந்தமையால் மகிழ்ந்து. ராமனை வணங்கி வாழ்த்தினர் என்பது கருத்து. 54 |