புனித மாதவர்- புனிதமான தவமுனிவர் எல்லோரும்; ஆசியின் பூமழை பொழிந்தார் - ஆசிமொழிகளாகிய மலர்மாரி பொழிந்தனர்; அனைய கானகத்து மரங்களும் - அந்தக் காட்டில் உள்ள பல வகை மலர்மரங்களும்; அலர் மழை சொரிந்த - மலர்மழை பொழிந்தன; அவ்வழி முனியும் - அப்போது விசுவாமித்திர முனிவனும்; வேள்வியை முறைமையின் முற்றி - வேள்வியை முறைப்படி செய்து முடித்து; இனிய சிந்தையன் - மகிழ்ந்த மனம் உடையவனாய்; இராமனுக்கு இனையன இசைத்தான் - இராமபிரானைப் பார்த்துப் பின் வருமிவற்றைச் சொல்லலானான். புனிதம்: தூய்மை. மாதவர்: சிறந்த முனிவர்கள். ஆசி: ஆசிமொழி. பொழிதல்: மிகப் பொழிதலாம். வினை உருவகம். அனைய: அந்த. கானகம்+அத்து: கானகத்து. இதில் ‘அத்து’ சாரியை. அலர்: நன்கு விரிதல். முற்றி: நிறைவேற்றி. இனிய சிந்தையன் என்பதை இராமனுக்குக் கூட்டி உறை கூறினும் அமையும். இசைத்தல்: சொல்லுதல் 55 |