என்று கூறிய பின்னர்- என்று முனிவன் ராமனைப் பாராட்டிக் கூறிய பின்பு; அவ்வெழில் மலர்க்கானத்து - அழகிய மலர்கள் நிறைந்த அந்தக் கானகத்தில்; தான் அருந்தவ முனிவரோடு - அரிய தவத்தை உடைய மற்ற முனிவர்களோடும் சேர்ந்து; அன்று உவந்து இருந்தான் - மகிழ்வுடன் தங்கி இருந்தான்; கோசலை குருசில் - கோசலை பெற்ற குமாரனான இராமன்; இன்று யான் செயும் பணி என்கொல் - இன்று. இனிமேல் நான் செய்யவேண்டிய பணி என்னவோ; பணி என - கட்டளை இட்டருளக என்று; குன்றுபோல் குணத்தான் எதிர் - மலை போலும் அளவிடற்கரிய குணத்தவனான விசுவாமித்திரனிடம்; இசைத்தான் - கேட்பானாயினான். எழில்: அழகு. மலர்க்கானம்: மலரையுடைய கானகம். உவந்து: மகிழ்ந்து. இருத்தல்: தங்கியிருத்தல். இன்ப. துன்பங்களுக்குச் சலியாதிருக்கும் குணம் உடைமையால் ‘’குன்றுபோல் குணத்தான்’’ என முனிவன் சிறப்பிக்கப்பட்டான் என்பர். ‘குருசில்’: வெருமைமிக்கோன் பணி: கட்டளை. இசைத்தான்: சொன்னான். 57 |