ஐய! அரிய யான்சொலின் - மேலோனே! அரிய செயல் என்று நான் சொல்வேனானால்; நிற்கு அரியது ஒன்று இல்லை - உனக்குச் செய்வதற்கு அரியசெயல் எதுவுமே இல்லை (ஆயினும்); பெரிய காரியம் உள - அரியபெரிய செயல்களும் உள்ளன; அவை முடிப்பது பின்னர் - அவற்றைச் செய்து முடிக்கத் தக்க காலம் பின்னால் வரப் போகிறது. (எனவே); வார்புனல் விரியும் - பெருகிவரும் நீர்நிறைந்துள்ள; மருதம் சூழ்மிதிலையர் கோமான் - மருத நிலங்கள் சூழ்ந்துள்ள மிதிலை நாட்டின் மன்னனான சனகன்; புரியும் வேள்வியும் காண்டும் நாம் - செய்கின்ற வேள்வி ஒன்றினையும் நான் சென்று பார்ப்போம்; எழுக - எழுந்து என்னுடன் வருவீர்களாக; என்று போனார் - (என்று கூறி அழைத்தேக) மூவரும் சென்றனர். சொலின்: சொல்லியன் என்பது தொகுக்கப்பட்டது ‘ஐ’ என்பதற்கு அழகு என்பதும் பொருள். எனவே ‘ஐய’ என்பதற்கு ‘அழகனே’ என்பதும் பொருந்துவதே. ஒன்று: ஒரு சிறிதும் எனவும் கூறுவர். வார்புனல்: பெருகிவரும் நீர். 58 |