9.அகலிகைப் படலம் படல விளக்கம்: கௌதம முனிவனின் மனைவியும் சனகனின் புரோகிதனான சதானந்த முனிவனுடைய தாயுமான அகலிகை இந்திரனால் ஏமாற்றப் பட்டு அவனோடு கூடிப் பின்னர்க் கௌதம முனிவனது சாபத்தால் கல்லுருவம் அடைகிறாள். இராமனும் இலக்குவனும் விசுவாமித்திரனோடு மிதிலைக்குச் செல்லும்போது இராமனது திருவடித் துகள்பட்டுத் தனது சாபம் நீங்கி முன்னைய பெண் வடிவத்தை அடைந்த வரலாற்றைக் கூறுவது இப் படலம். விசுவாமித்திரன் முதலான மூவரும் சோணை நதியை அடைந்து சோலையில் தங்குகின்றார்கள்; பின்பு கங்கையைக் கண்டு மிதிலை நாடு சேர்கின்றார்கள். அப்பொழுது அதன் மதிற்புறத்தே கல்லாய்க் கிடந்த அகலிகைக்குப் பெண்ணுருவம் தருகின்றான் இராமன். வியப்புற்ற இராமன் கேட்டதற்கிணங்க விசுவாமித்திரன் அகலிகை வரலாறு கூறுகின்றான். பின்னர் மூவரும் அகலிகையைக் கௌதம முனிவனிடம் சேர்ப்பித்து மிதிலையின் புறமதிலை அடைகின்றார்கள். விசுவாமித்திரன். இராமன். இலக்குவன் மூவரும் சோணை நதியை அடைந்து சோலையில் தங்குதல். கலித்துறை |