பக்கம் எண் :

292பால காண்டம்  

சுவையான   கரும்புகளை;  ஆட்டிய  அமுதமும்  -    (ஆலையில்
வைத்து)  ஆட்டுவதால்  பெருகும்  அமுதம்  போன்ற  இனிய பாலும்
(கரும்புப்  பால்);  அழிதேன்  நறையும் - தேன் கூடுகள் சிதைவதால்
சிந்திப்  பெருகும்  மணமுள்ள  தேனும்; அல்லது - (என்னும்  இவை
மாறி   மாறிப்  பெருகுவதேயல்லாமல்)  இவையல்லாமல்;  நளிர்புனல்
பெருகலா
- குளி்ர்ந்த நீர் பெருக இடம் பெறாதன.  

நதி  வளம்:  நதிகளை  வருணிக்குங்கால் தாமாகப் பால் சுரக்கின்ற
எருமை  வளம்.  மாமரச்  சோலை   வளம்  கரும்புக் குவியல். தேன்
பெருக்கம் ஆகியவற்றைக் கூறி நாட்டு  வளத்தையும்  புலப்படுத்தினார்.
முதுமேதி:  பருவம்  நிரம்பிக்  கன்றை   ஈன்ற  எருமை.  மேற்கோள்
‘கனைத்திளங்  கற்றெருமைகன்றுக்   கிரங்கி  நினைத்து  முலைவழியே
நின்று பால் சோர’ - திருப்பாவை-12                          10
   

462.இழைக்கும் நுண் இடை இடைதர.
   முகடு உயர் கொங்கை.
மழைக் கண். மங்கையர் அரங்கினில்.
   வயிரியர் முழவம்
முழக்கும் இன் இசை வெருவிய
   மோட்டு இள மூரி
உழக்க. வாளைகள் பாளையில்
   குதிப்பன - ஓடை.
 
  

ஓடை   -  (அந்த  நாட்டிலுள்ள) நீரோடைகள்; இழைக்கும்  நுண்
இடை  
-  (பஞ்சின்)   நூலைக்  காட்டிலும்  நுட்பமான   இடையானது;
இடைதர     
-    (சுமையைப்    பொறுக்கமாட்டாமல்     மெலிந்து)
பின்வாங்குமாறு;  முகடு  உயர்   கொங்கை  -   மலைச்சிகரம்போல்
ஓங்கியுள்ள தனங்களையும்;  மழைக்கண் - மழைத்துளிபோல்  குளிர்ந்த
கண்பார்வையையும்   உடைய;   மங்கையர்   -   இளம்   பெண்கள்;
அரங்கினில்  
-  (நடனம்  ஆடுகின்ற)  நாடக  சாலையிலே; வயிரியர்
முழவம்  முழக்கும்  
-   தம்மோடு இருக்கும் பாடகர்கள்  மத்தளத்தை
முழக்குவதனால்  உண்டாகிய;  இன்  இசை வெருவிய - இனிமையான
ஓசையைக்  கேட்டு  அஞ்சி  ஓடுகிற;  மோடு  இள  மூரி  -  பெரிய
இளமையான எருமைகள்;  உழக்க - (படிந்து) கலக்குவதால்; வாளைகள்
பாளையில்   குதிப்பன   
-   (அதற்கு   அஞ்சி)  வாளை  மீன்கள்
பக்கங்களிலுள்ள  (தென்னை. கமுகுகளின்)  பாளைகளில்  மேல்  தாவிப்
பாயப் பெறுவன.  

நடன   அரங்கில்  மங்கையர்  ஆடும்போது வயிரியர்    மத்தளம்
கொட்டு்கிறார்கள்;  அதைக் கேட்டு  அஞ்சிய  எருமைகள்  ஓடிச்சென்று
ஓடைகளில்  பாய்ந்து  நீரைக்   கலக்குகின்றன.   அதனால்  அங்குள்ள
வாளைகள்    பாளைகளில்    பாய்கின்றன.    வயிரியர்:     மத்தளம்
கொட்டுபவர்.                                               11