(அப்பொழுது) செய்ய தூயவன்- (நடுநிலை வழிச் செல்லக் கூடிய) மனத் தூய்மையுடைய அம் முனிவன்; விழி தீ சிந்த நோக்கி - கண்கள் தீப்பொறியைக் கக்குமாறு கோபித்துப் பார்த்து; செய்ததை உணர்ந்து - (இருவரும்) செய்த தீச்செயலை அறிந்து; நின்கைச் சுடு சரம் அனைய சொல்லால் - உனது கையால் ஏவப்படும் கொடிய அம்பு போன்ற சுடு சொல்லால்; அவனை - அந்த இந்திரனை; ஆயிரம் மாதர்க்கு உள்ள - பெண்களுக்கு உள்ள ஆயிரம்; அறிகுறி உனக்கு - குறிகள் உனக்கு; உண்டாக என்று - உண்டாகட்டும் என்று; ஏயினன் - சாப வார்த்தையை ஏவினான்; அவை எலாம் - (அவ்வாறே) அப்பெண்குறிகள் ஆயிரமும்; இமைப்பின் முன்னம் - இமைப் பொழுதிலே; இயைந்தன - அவன் உடம்பில் வந்து பொருந்தின. செய்ய தூயவன்: தன்னோடு எவ்வித உறவும் இல்லாத இந்திரனுக்குச் சாபம் கொடுத்தான். அத்தோடு அமையால் தன் மனைவிக்கும் ஒரு சார் அன்பு காட்டாமல் சாபம் கொடுத்தான். ஆதலின் கௌதமன் தூயவன் ஆனான். இந்திரனுக்கு அமைந்த சாபம்: ஒரு பெண்ணின் குறியிடத்து இந்திரன் மிகவிருப்பம் கொண்டு இழிந்த செயல் புரிந்தமையால் அதனிடம் வெறுப்பு உண்டாகும் பொருட்டு அவனுடம்பு முழுவதும் பெண்குறிகள் அமையுமாறு சாபம் அளிக்கப் பெற்றது. சுடு சரம் அனைய சொல்: இராமனது அம்பு பகைவரைக் கொல்லுதலாகியத் தன் பயனை விரைந்து தருதல்போல முனிவர் சொல் கொடியவரை அழித்தலாகிய தன் பயனைத் தவறாமல் விரைந்து தரும் என்பது குறிப்பு. 21 |