புரந்தரன் எல்லை இல் - (தன் உடம்பு முழுவதும் சாபத்தால் கெட்டு விட்டதனால்) இந்திரன் அளவில்லாத; நாணம் எய்தி - நாணத்தை அடைந்து; யாவர்க்கும் - (தனது நிலையைப் பார்த்தவர்கள். கேட்டவர்கள்) எல்லோர்க்கும்; நகை வந்து எய்த - பரிகாசச் சிரிப்பு வந்தெய்தும்படி; புல்லிய பழியினோடும் - தனக்கு நேர்ந்த பழியோடும்; போயபின்றை - வானுலகத்திற்குச் சென்ற பின்பு; மெல்லியலாளை நோக்கி - (அம் முனிவன்) மெல்லியலாளான தன் மனைவியைப் பார்த்து; விலைமகள் அனைய நீயும் - (தீய ஒழுக்கத்தால்) வேசியைப் போன்ற நீயும்; கல் இயல் - கல் வடிவம்; ஆதி என்றான் - ஆகுக என்று சபித்தான்; கருங்கல்ஆய் - (உடனே) அவள் கருங்கல் வடிவாய்; மருங்கு வீழ்வாள் - பக்கத்திலே வீழ்வாள் ஆயினாள். விலைமகள் அனையவள்: உண்மையில் அகலிகை நெஞ்சறியக் கற்பிழந்தவள் ஆகாள். இருந்தும் கௌதமன் சினத்தால் உண்மையை. ஆராய்ந்து பாராமல் ‘விலைமகள் போன்றவள்’ அகலிகை என்று கூறுகிறான். 22 |