இவ் வண்ணம் - இச் செய்தியே; நிகழ்ந்த வண்ணம் - (முற்காலத்து) நடந்த முறையாகும்; இனி இந்த - இனிமேல் (நீ இவ்வுலகில் பிறந்து தீயவரை அழித்து நல்லவர்களைப் பாதுகாத்தல் என்பது ஏற்பட்ட பிறகு) இந்த; உலகுக்கு எல்லாம் - உலகத்திலுள்ள உயிர்களுக்கெல்லாம்; உய்வண்ணம் அன்றி - (துன்பம் நீங்கிக்) கடைத் தேறும் வழியே அல்லாமல்; மற்று ஓர் துயர் வண்ணம் - அதற்கு வேறானதொரு துன்பத்தின் வழியை; உறுவது உண்டோ - அடைதல் கூடுமோ? (கூடாது); மழை வண்ணத்து அண்ணலே - மேகம் போன்ற கரிய திருமேனியுடைய இராமனே! அங்கு - வருகிற வழியில் (வனத்தில்); மைவண்ணத்து அரக்கி - அஞ்சனம் போலும் கரிய நிறத்தையுடைய தாடகை என்னும் அரக்கியோடு; போரில் - செய்த போரில்; உன் வைண்ணம் கண்டேன் - உன் கையின் திறத்தைப் (வில்லினது ஆற்றலை) பார்த்தேன்; இங்குக் கால் வண்ணம் - இந்த இடத்தில் உன் திருவடியின் திறத்தை; கண்டேன் - பார்க்கலானேன். மழை வண்ணத்து அண்ணல்: கண்டாரின் மனக் கொதிப்பை நீக்கும் குளிர்ந்த தன்மையுடையவன்; கருநிறம் பொருந்தியவன்; கைம்மாறு கருதாது கருணையை மழையாகப் பொழிபவன் இராமன். மைவண்ணத்து அரக்கி: பொய். கொலை. வஞ்சனை முதலான தீய பண்புகளுக்கு உறைவிடமானவள் தாடகை - இருவரின் கருநிறத்துக்கும் வேறுபாடு காட்டப்பெற்றுள்ளது. கை வண்ணமும் கால் வண்ணமும்: முறையே தீயவர்களை அழித்தலும் நல்லவர்களைக் காத்தலும் ஆகிய இருவகைத் திறன்கள்.24 |