தீது இலா உதவி - தீமையில்லாத பேருதவியை; செய்த - அகலிகைக்குச் செய்தருளிய; சே அடிக் கரிய செம்மல் - செம்மையான திருவடிகளையுடைய கரிய இராமன்; கோது இலா - குற்றமற்ற; குணத்தான் சொன்ன - நற்குணங்களையுடைய விசுவாமித்திரன் சொல்லிய; பொருள் எலாம் - செய்தி முழுவதையும்; மனத்தில் கொண்டு - தன் உள்ளத்தில் கொண்டு; அன்னை - (அகலிகையை நோக்கி) தாய் போன்றவளே!; மாதவன் அருள் - மிக்க தவத்தால் மேம்பட்ட கௌதமனது கருணை; உண்டாக - (உன் பக்கம்) உண்டாகும்படி; நீ வழிபடு - நீ அவனுக்குப் பணிவிடை செய்வாயாக; படர் உறாதே - (இடையிலே உனக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைந்து) வருந்தாதே!; போது என்ன - செல்க என்று கூற; பொன்அடி - (அகலிகை) இராமனுடைய அழகிய திருவடிகளை; வணங்கிப் போனாள் - வணங்கி அப்பால் சென்றாள். தீதிலா உதவி: பிறருக்குத் தீமை பயவாதது; கைம்மாறு கருதாதது; முன் செய்த உதவியை நோக்காதது. சேவடிக் கரிய செம்மல்: முரண் தொடை. ஒப்புமை: ‘திருவடியும் கையும் கனிவாயும் செய்ய கரியவன்’ - (சிலம்பு: ஆய்ச். குரவை. படர்க்கை. பரவல் 2) 25 கௌதமனிடம் அகலிகையைச் சேர்ப்பித்து மூவரும் மிதிலைப் புறமதிலைச் சார்தல் |