பக்கம் எண் :

304பால காண்டம்  

தத்துவ    ஞானம்  பொருந்திய  கௌதம  முனிவன்;  விருந்தினர்
தம்மைக் காணா
-  விருந்தினராகிய அவர்களைப் பார்த்து; வியந்த
நெஞ்சன்
- ஆச்சரியத்தோடு கூடிய மனம் கொண்டவனாகி; பரிந்து
எதிர்கொண்டு
  -  அன்பு  பூண்டு   எதிரே  போய்  (அவர்களை)
அழைத்து  வந்து;  கடன்முறை  பழுதுறாமல்  - (விருந்தினர்க்குச்
செய்யக்கூடிய)   கடமையாகிய  விருந்து    உபசரிப்பு     சிறிதும் 
குறைவுபடாமல்; புரிந்தபின் -  செய்த  பின்னர்;  காதி  செம்மல்  
-  காதி என்னும் முனிவனின் மைந்தனான  விசுவாமித்திரன்; புனித
மாதவனை  நோக்கி
 -  தவத்தால் தூயவரான அக் கௌதமரைப்
பார்த்து.

வான்மீகச்     செய்தி: கௌதமன். தன் மனைவியான அகலிகை.
இந்திரன்  ஆகிய  இருவரையும்  சபித்ததால்  நேர்ந்த  பாவத்தைப்
போக்கிக் கொள்வதற்காக இமயமலைச் சாரலுக்குச் சென்றான். தனது
ஞானக் கண்ணால் தன் மனைவியின் சாப விமோசனத்தை உணர்ந்து
ஆச்சிரமம் திரும்பி.  விருந்தினரை உபசரித்தான். வியந்த நெஞ்சன்:
சிறந்த விருந்தினர் தன் ஆச்சிரமம் வருவதற்குக் காரணமாகத் தான்
செய்த பெருந்தவம் யாதோ  என்று வியந்தான். வந்த விருந்தினரை
உபசரிப்பதற்கு   உதவியாக   உள்ள  தன்   மனைவியைப் பிரிந்த
நாள் முதல் எந்த  விருந்தினரையும்  தன்  பக்கம்  வரக்  காணாத
அம்  முனிவன்.  இன்று   தன்    மனைவியோடு   விருந்தினரும்
வருவதைப் பார்த்து வியப்புற்றான் என்றும் கருதலாம்.          26
   

478.

‘அஞ்சன வண்ணத்தான்தன்
   அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை
   வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை
   நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன
   முனிவனும். கருத்துள் கொண்டான்.*
   

அஞ்சன    வண்ணத்தான்   தன் -  மைபோல்    கரியதிரு
மேனியுடைய    இராமனது;    அடித்துகள் -    திருவடிப்பொடி;
கதுவாமுன்னம் - தன்மேல்   படுவதற்கு    முன்பே   (பட்டதும்);
வஞ்சிபோல்   இடையாள்  - வஞ்சிக்கொடிபோலும் இடையுடைய
அகலிகை; முன்னை வண்ணத்தள் -  பழைய  வடிவத்தை;  ஆகி
நின்றாள்
 -   உடையவளாக  எழுந்து   நின்றாள்;  நெஞ்சினால்
பிழைப்பு  இலாளை
 -  நெஞ்சாரக் குற்றம் செய்யாத இவளை; நீ
அழைத்திடுக என்ன
- நீ அழைத்துச்  சேர்த்துக்  கொள்க  என்று
விசுவாமித்திரன்  கூற;  கஞ்ச மா மலரோன் அன்ன  முனிவனும்
-  தாமரை   மலரில்   தோன்றிய  பிரமனைப்  போன்ற  கௌதம
முனிவனும்;   கருத்துள்     கொண்டான்  -   (அச் சொற்களை)
மனத்திலே ஏற்றுக்கொண்டான்.