குணங்களால் உயர்ந்த - நற்குணங்கள் அனைத்திலும் மேம்பட்டவனும்; வள்ளல் - வள்ளலுமாகிய இராமன்; கோதமன் கமலத் தாள்கள் - கௌதமனுடைய தாமரைத் திருவடிகளை; வணங்கினன் - வணங்கி; வலம் கொண்டு ஏத்தி - வலமாகச் சுற்றித் துதிசெய்து; மாசு அறு கற்பின் மிக்க - குற்றமற்ற கற்பினால் மிக்க; அணங்கினை - அத்தெய்வப் பெண் போன்ற அகலிகையை; அவன் கை ஈந்து - அம் முனிவனது கையிலே ஒப்படைத்து; ஆண்டு அருந்தவனோடும் - அப்பொழுதே அரிய தவத்தையுடைய விசுவாமித்திரனோடு; வாசம் மணம் கிளர் - நறுமணம் கமழும்; சோலை நீங்கி - அச்சோலையை நீங்கி; மணிமதில் கிடக்கை - அழகிய நவமணிகள் இழைத்த (மிதிலா நகரின்) புறமதிலை; கண்டார் - (அம் மூவரும்) பார்த்தார்கள். இராமன் பண்பு: குணங்களால் உயர்ந்தவன்; (அருளை வாரி வழங்கும்) வள்ளல். அகலிகை பண்பு: மாசறு கற்பின் மிக்க அணங்கு; கற்பிலே குற்றம் இல்லாதவள்; தெய்வப் பெண் போன்றவள்; தவிர வணங்கத் தக்கவள். 28 |