பக்கம் எண் :

  மிதிலைக் காட்சிப் படலம்307

செங்கண்    ஐயனை - தாமரை  போன்ற  கண்களைக்  கொண்ட
இராமனை; ஒல்லை வா  என்று  -  விரைவில் வந்து சேர்க என்று;
அழைப்பது போன்றது
- அழைப்பதைப் போன்றுள்ளது.
 

அணி: தன்மைத் தற்குறிப்பேற்றவணி. இராமன். அருகிலே செல்லும்
போது   அந்நகரத்து   மதில்கள்  மேலுள்ள  கொடிகள்   அசைவது.
திருமகள்   தன்னிடத்தில்   சீதையாகப்  பிறந்துள்ளாள்   என்பதைக்
குறிப்பாகச்  சொல்லி  அவளுக்குக்  கணவனாவதற்கு ஏற்ற இராமனை
விரைவிலே   வந்து   மணம்   புரியுமாறு  அந்த  நகரம்  கைகாட்டி
அழைப்பது  போன்றது.  உருவகம்:  கொடிகளாகிய  கைகள். தாமரை
மலரின்  குற்றம்:  மலர்தலும்  பின்  குவிதலும். வாட்டம் அடைதலும்
ஆகும். யான் செய் மாதவத்தின் வந்து: திருமகள் தன்  இயற்கையான
இடத்தைவிட்டு  விருப்பத்தோடு  தன்னிடம்  பிறப்பதற்கு ஏற்ற தகுதி
உயர்ந்த தவத்தால் அமைய வேண்டும்.                        1
 

481.

நிரம்பிய மாடத்து உம்பர்
   நிரை மணிக் கொடிகள் எல்லாம்.
‘தரம் பிறர் இன்மை உன்னி.
   தருமமே தூது செல்ல.
வரம்பு இல் பேர் அழகினாளை
   மணம் செய்வான் வருகின்றான்’ என்று
அரம்பையர் விசும்பின் ஆடும்
   ஆடலின். ஆடக் கண்டார்.

 

பிறர்   தரம் இன்மை உன்னி- (சீதையைத் திருமணம் செய்து
கொள்வதற்கு   இராமனைத்-   தவிர)   வேறு  எவர்க்கும்   தகுதி
இல்லாமையை  நினைத்து; தருமமே தூது செல்ல - அறக் கடவுளே
தூது  போய்த் தெரிவிக்க;  வரம்பு  இல்  -  அளவில்லாத;  பேர்
அழகினாளை  
-  சிறந்த  அழகுடைய சீதையை; மணம் செய்வான்
- திருமணம்  செய்து  கொள்ளும்   பொருட்டு   (அந்த   இராமன்);
வருகின்றான் என்று
- வருகின்றான் என்று மகிழ்ந்து;  அரம்பையர்
- தெய்வ மகளிர்; விசும்பின் ஆடும்  - வானத்திலே  மகிழ்ச்சியால்
ஆடுகின்ற;  ஆடலின் -  ஆடலைப்  போல;  நிரம்பிய மாடத்து
உம்பர்
-  (அந்த  நகரத்தில்)   நிறைந்துள்ள   மாடங்களையுடைய
வீடுகளின் மேலே; நிரைமணிக்  கொடிகள்  -  வரிசையாக  உள்ள
அழகிய  கொடிகள்; எல்லாம் ஆட - யாவும் காற்றில்   ஆடுவதை;
கண்டார்  
- (அம்மூவரும்) பார்த்தார்கள்.
 

மாட    மாளிகைகளின்மேலுள்ள   கொடிகளின்  காட்சி   இதில்
கூறப்பட்டுள்ளது.  அணி:  தன்மைத் தற்குறிப்பேற்றவணி - கொடிகள்
அசைவதை.  தரும  தேவதை தூண்ட இராமன் சீதையை மணம்புரிய
வருவதற்காகத்    தெய்வப்    பெண்கள்   ஆடுவதாகக்  குறித்தார்.
தருமத்தின் பயன்: உருவத்திலும் ஒருவர் மணம்புரிதல் தருமமாகும். 2