முடிச் சனகர் பெருமானும்- பொன்முடி தரித்த சனக மன்னனும்; முறையால் - (அப்பொழுது) வேதவிதி முறைப்படியே; மறைவேள்வி முற்றி - வேத மந்திரங்களோடு கூடிய யாகத்தை முடித்துவிட்டு; சுற்றும் - எல்லாப் பக்கங்களிலும்; இடிக் குரலின் - இடி முழக்கம் போன்று; முரசு இயம்ப - பேரிகைகள் ஒலிக்க; இந்திரன் போல் - தேவேந்திரன் போல; சந்திரன் தோய் - சந்திர மண்டலத்தை அளாவி உயர்ந்துள்ள; கோயில் எய்தி - அரண்மனையை அடைந்து; எடுத்த - அங்கே உயர்ந்து அமைந்த; மணி மண்டபத்துள் - நவரத்தின மண்டபத்திலே (விசுவாமித்திரன் முதலியோரை உபசரிக்க); எண் தவத்து - மதிக்கத்தக்க தவத்தையுடைய; முனிவரொடும் - விசுவாமித்திர முனிவனுடன்; பைந்தார் - பசுமையான வெற்றி மாலை சூடிய; வடித்த குனி வரிசிலை - வளையும் இயல்புள்ள கட்டமைந்த நீண்ட வில்லை ஏந்திய; கை மைந்தனும் - கையையுடைய இராமனும்; தம்பியும் - அவன் தம்பியாகிய இலக்குமணனும்; மருங்கின் இருப்ப - (தன்) பக்கத்திலே வீற்றிருக்க; இருந்தான் - இனிதாக அமர்ந்திருந்தான் சனகன். சனகன் தன் வேள்வி முடிந்ததும் அரண்மனை மண்டபத்தில் வேள்வி கண்டு வந்த விசுவாமித்திரனும். இராம லக்குவர்களும் உடன் இருக்கத் தங்கினான் எனலாம். சிலைக் கைம் மைந்தன்: வில்லாற்றலும் தோள் வலிமையும் மிக்கவன் இராமன். 156 சனகன் வினாவும் விசுவாமித்திரன் உரையும் |