இருந்த குல குமரர்தமை- (சனகன்) தன் அருகில் அமர்ந்திருந்த உயர்குல மைந்தர்களை; இருகண்ணின் - (தன்) இரண்டு கண்களாலும்; அழகு முகந்து பருக - அழகை அள்ளி முழுவதும் பருகும் படி; நோக்கி - பார்த்து; அருந்தவனை - (உடனே) அருந்தவத்தவனான கோசிகனை; அடிவணங்கி - திருவடிகளில் விழுந்து வணங்கியவனாய் (அவரை நோக்கி); அடிகள் - தவ வேதியரே!’ யாரை இவர் - இக் குமாரர்கள் யாவர்?; உரைத்திடுமின் - (இவர்கள் இத்தன்மையர் என்று) சொல்வீராக; என்ன - என்று கேட்க (கோசிக முனிவன்); விருந்தினர்கள் - (உன்பக்கம்) புதியவராக வந்த இவர்கள்; பெருந்தகைமை- பெருந்தகைமை நிரம்பிய; தயரதன் தன் புதல்வர் - தசரத மன்னரின் மைந்தர்கள்; நின்னுடைய வேள்வி - உனது யாகத்தை; காணிய வந்தார் - காணும் பொருட்டு வந்துள்ளார்கள் (அது தீர்ந்துவிட்டதால் இனி); வில்லும் காண்பார் - (உன்னிடமுள்ள) சிவதனுசையும் பார்ப்பார்கள்; என - என்று கூறி; அவர் தகைமை - அம் மன்னரின் மைந்தர் தம் பெருமைகளை; பேசல் உற்றான் - சொல்லத் தொடங்கினான். யாரை இவர் உரைத்திடுமின் - ‘ஐ’ இடைச்சொல். அவரது குலப்பெருமை அவர் பெருமையே என்பது உணருமாறு ‘அவர் தகைமை பேசல் உற்றான்’ என்றார். வில்லும் காண்பார்: மற்றவர் போல் வேள்வியைக் கண்களால் காண்டலோடு அமையாமல் நீ கன்னி மணத்தின் பொருட்டு. வைத்துள்ள சிவதனுசையும் வளைக்க வல்லவர்கள் என்ற குறிப்பும் தோன்றும். 157 |