நிரம்பியவனும்; இவர் குலத்து - இம் மைந்தர்களின் (சூரிய) வமிசத்திலே தோன்றின; ஓர் தராபதி காண் - (பிருது என்னும்) ஓர் அரசனே என்று அறிவாய். மனு: காசியப மகா முனிவரின் மனைவியருள் ஒருத்தியான அதிதி தேவியினிடம் விவஸ்வான் என்ற பெயருள்ள சூரியன் தோன்றினான். அந்தச் சூரியன் மகனே மனு. இவனே இராமனின் வமிசத்துக்கு ஆதி மனிதன். இந்த மனு மனுக்கள் பதினால்வரில் ஏழாமவனாவான். பிருது மன்னன்: வேனன் என்னும் அரசன் பண்புகெட்டவன்; தீமை செய்வதில் விருப்பம் உடையவன்; திருமாலை நிந்தித்து வேள்வி முதலானவற்றைச் செய்யவொட்டாமல் தடுத்தான்; அதனால் முனிவர்கள் அவனைத் தருப்பைகளால் அடித்துக் கொன்றார்கள். ஆனால். அவனது வம்சம் பெருக வேண்டி ஒரு மகனை அவன் மூலம் உண்டாக்க விரும்பினர். அதற்காக அவனது வலக்கையைக் கடைந்து நெருப்பை உண்டாக்கி அதில் பிரமனைக் குறித்து வேள்வி செய்ய. அதில் பிருது என்பான் நாராயணன் அம்சம் உடையவனாகத் தோன்றினான். நாட்டில் எங்கும் உணவின்றித் தவித்த மக்கள் இப் பிருது மன்னனிடம் முறையிட்டார்கள். மன்னனும் பூமிதேவியை எதிர்த்து போர் செய்யப் பசுவின் வடிவிலுள்ள அவளும் சுவாயம்புவ மனுவான கன்றினிடம் தான் அடக்கி வைத்திருந்த பொருள்கள் அனைத்தையும் சுரக்கச் செய்தாள். குடிமக்களும் அவன் உண்டாக்கின உணவினாலே வலிமைபெற்று உயிர்வாழ்ந்தார்கள். பேதித்த உயிர் நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பினவாய்ப் பகுக்கப்பட்டுள்ள உயிர்வகைகள். 1 |