அரைசன் - அந்தக் ககுத்த மன்னனது; அவன் பின்னோரை - குலத்தில் பின்பு தோன்றிய அரசர்களை; அளப்பு - (இத்தன்மையுடையவர் என்று) அளவிட்டுச் சொல்லுதல்; என்னாலும் அரிது - என்னாலும் முடியாது; நரை - முடி வெளுத்தலும்; திரை - உடம்பின் தோல் சுருங்குதலும்; மூப்பு - (இவற்றிற்குக் காரணமான) முதுமைத் தன்மையும்; இவை - என்னும் இவற்றை; மாற்றி - நீக்கி; இந்திரனும் - தேவேந்திரனும்; (மற்ற தேவர்களும்); நந்தாமல் - சாகாதபடி; குரைகடலை - ஒலிக்கின்ற பாற்கடலை; நெடுவரையால் - பெரிய (மந்தர) மலையால்; கடைந்து - கடைந்து; அமுது கொடுத்தானும் - (அதிலிருந்து) தேவர்களுக்கு அமுதத்தை எடுத்துக் கொடுத்தவனும்; உரை குறுக - (மொழியில்) சொற்கள் குறையும்படி. நிமிர் கீர்த்தி- மிகுதியான புகழையுடைய; இவர் குலத்தோன் - இந்த மைந்தர்களது குலத்தில் உதித்த; ஒருவன் காண் - ஓர் அரசனே ஆவான். உரை குறுக நிமிர்கீர்த்தி - இக் குமாரர்களின் பெரும்புகழ் சொல்லுக்கு அடங்காது. அதாவது இவர்களின் புகழைக் கூறுவதற்கு வேண்டிய சொற்கள் உலகிலே இல்லை என்பது. இந்திரனும் - எச்சவும்மை. உயர்வு சிறப்பும்மை. 4 |