பொருது உறை- போர்புரிந்த பின் உறையில்; சேர் வேலினாய் - செருகிய வேற்படையை உடைய சனகனே!; சுடர்நேமி செல - ஒளியுடைய தமது ஆணைச் சக்கரம் (எங்கும் தடையில்லாமல்) செல்லுமாறு; திரிபுவனம் - மூன்று உலகங்களையும்; முழுது ஆண்டு நின்றோர் - முழுவதும் ஆட்சி புரிந்தவர்களும்; கருதல் அரும்பெரும் - நினைக்கவும் முடியாத (இரக்கம் முதலிய) சிறந்த; குணத்தோர் - குணங்களையுடையவர்களும் ஆகிய; இவர் முதலோர் - இக் குமாரர்களின் குலத்திலே தோன்றிய முந்தைய அரசர்கள்; கணக்கு இறந்தோர் - எண்ணற்றவர்கள் (இவர் குலத்துள்) ஒருவன்; புலிப்போத்தும் - (இயல்பாகவே பகைமையுடைய) ஆண்புலிகளும்; புல்வாயும் - மான்களும்; ஒருதுறையில் - (அப் பகையுணர்ச்சியின்றி) ஒரே நீர்த்துறையிலே; நீர் உண்ண - (இறங்கித்) தண்ணீர் குடிக்கும்படி; உலகு ஆண்டோன் - உலகத்தை அரசாண்டவன்; ஒருவன் உளன் - (மாந்தாதா) இருந்தான். அரசனது ஆணையிடத்துத் தமக்குள்ள அச்சத்தால் எவையும் நலியத்தக்கனவும் நலியாமல் உள்ள நீதிமுறை கூறியது. இந்த அரசன் மாந்தாதா என்பவன். அவன் அரசாண்ட காலத்தில் நாடெங்கும் சத்துவ குணம் நிலவியிருந்ததால் மிருகங்கள் முதலியனவும் அன்பும் அருளும் பூண்டு வாழ்ந்தன. புல் வாய் - புல்லையுண்ணும் வாயையுடைய (மான்) - காரணப்பெயர். வேற்றுமைத் தொகையன்மொழி. 5 |