முடியும் - பொருந்திய நவரத்தின முடியும்; ஆரமும் - மாலைகளும்; வாளொடு மின்ன - ஒளியோடு மின்னுமாறு; வில் பிடித்த - கையில் வில்லேந்திய; அறம் என்ன - தருமதேவதை போல; ஒரு தனியே திரிந்து - தான் ஒருவனாகவே (வாளும் கையுமாக வான் உலகு சென்று) சஞ்சரித்து; அமராபதி காத்தோன் - (இந்திரனது) அமராவதி நகரத்தைக் காத்து நின்றான் (முசுகுந்தன்). முசுகுந்தன்: வானுலகில் அசுரர்கள் தேவர்களோடு போர் செய்து அவர்களைத் துரத்தினர்; இந்திரன் முதலான தேவர்கள் இந்த அரசனை அடைந்து உதவ வேண்டினர். அதனைக் கேட்ட மன்னவன் வான் சென்று அசுரர்களைக் கொன்று முருகன் சேனைத்தலைவனாக வருகின்ற வரையிலும் வானுலகைக் காத்திருந்தான். வில்பிடித்த அறம் - இல் பொருள் உவமை. 6 |