அயன் என்பான் - (இம் மைந்தர் குலத்தில் உதித்த) அசன் என்னும் மன்னன்; வில் என்னும் நெடுவரையால் - தனது வில் என்கின்ற பெரிய மந்தர மலையாகிய மத்தினால்; வேந்து என்னும் கடல் - பகையரர்களாகிய பாற்கடலை; கலக்கி - கலங்கச் செய்து (கடைந்து); எல் என்னும் மணி முறுவல் - ஒளி வடிவமான முத்துப் போன்ற பற்களையுடைய; இந்துமதி என்னும் - இந்துமதி என்னும் பெயருடைய; திருவை - இலக்குமி போன்றவளை; அல் என்னும் - இருள் போல; திரு நிறத்த அரி என்ன - கரிய நிறமுடைய திருமால் போன்று; மல் என்னும் - மல் தொழிலின் வடிவம் என்று சொல்லத்தக்க; திரள் புயத்துக்கு - திரண்ட தன் தோள்களுக்கு; அணி என்ன வைத்தான் - ஓர் அணிகலனாக அணிந்தான். முன்பு திருமால் மந்தரமலையைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து அதில் தோன்றிய திருமகளைத் தன் மார்பில் வைத்துக்கொண்டது போல அளனும் வில்லாகிய மலையைக் கொண்டு பகைமன்னராகிய கடலைக் கடைந்து அதில் கிடைத்த இந்துமதி என்னும் திருமகளைத் தன் தோளில் வைத்துக் கொண்டான் என்பது கம்பரின் கவித்திறன். இந்துமதி சுயவரத்தில் மற்றையரசரை மதியாமல் அயனுக்கு உவந்து மாலை சூட்டினாள். அது கண்டு பொறாமை கொண்ட அரசர் போர் செய்ய அவர்களை அயன் வென்றான் என்பது அறியத்தக்கது. திருமகள் உவமை: பேரழகு உடைமையால். செல்வச் சிறப்பால் இந்துமதிக்குத் திருமகள் உவமை உருவக அணி (உவமை அங்கமாக). 12 தயரதன் மகப்பேற்று வரலாற்றை உரைத்தல் |