பொன்னின் மணி- பொன்னாலாகிய அழகிய; பரி கலத்தில் - பாத்திரத்துடன்; புறப்பட்ட இன் அமுதை - வெளிப்பட்ட அந்த இனிய உணவை; பன்னு மறைப் பொருள் - சிறப்பாகச் சொல்லப்படுகின்ற வேதங்களின் பொருள்களை; உணர்ந்த பெரியோன்தன் - அறிந்த (அறிவொழுக்கங்களில் மேம்பட்ட) அக் கலைகோட்டு முனிவனது; பணியினால் - கட்டளையால்; தன் அனைய - தனக்குத் தானே நிகரான; நிறைகுணத்து - நிறைந்த நற்பண்புகளைக் கொண்ட; தசரதனும் - தசரத மன்னனும்; வரன்முறையால் - வரிசை முறைப்படி; நல் நுதலார் மூவருக்கும் - அழகான நெற்றியுடைய (கோசலை முதலான) பட்டத்தரசிகள் மூவருக்கும்; நாலு கூறு இட்டு - நான்கு பங்காக்கி; அளித்தான் - கொடுத்தான் மூன்கு பங்குகளை முறையே கோசலை. கைகேயி. சுமித்திரை ஆகியோர்க்குக் கொடுத்து எஞ்சிய நான்காம் பங்கினை மீண்டும் சுமத்திரைக்கு அளித்தான் என்ப. 19 |