பக்கம் எண் :

  கார்முகப் படலம்425

தகு  பண்புகளையுடைய இக்குமாரன்;   நொய்தின் - விரைவாக; வில்
ஏற்றுமேல்  
-  சிவ  தனுசை  வளைத்து  நாண்  ஏற்றுவானேயானால்;
இடர்க்கடல்    ஏற்றும்   
-   (என்னையும்)   துயரக்  கடலிலிருந்து
கரையேற்றினவனாவான்;   நங்கையும்  -  என்  மகளான   சீதையும்;
நோற்றனள்   
-   (முன்  செய்த)  தவப்பேற்றைப்   பெற்றவளாவாள்;
என்றனன்
- என்று கூறினான்.

‘முனிவரே!  இம் மைந்தரின் குலவரலாற்றோடு தோள்வலிமையையும்
கூறினீர்.  உமது  வார்த்தைக்கு  மறமாற்றம் சொல்வேனோ?   ஆனால்
பெண்ணின்    திருமணத்தின்   பொருட்டு   வைத்த  இந்த  வில்லை
இதுவரை  எந்த  வீரரும்  வளைத்து   நாணேற்றினாரில்லை;அதனால்
என்  மகள்  திருமணமும் நடைபெறாமல் என் மனம்   கலங்கியுள்ளது.
இச்  சிவ  தனுசை  இச்  சிறுவன்   நாணேற்றினால்   என் துன்பமும்
நீங்கும்;  இச்  சீதையும்  தவப் பேற்றைப்   பெற்றவளாவாள் என்றான்.
எவராலும்   வளைக்கமுடியாமல்   இருந்ததால்   இதனை   ‘மாயவில்’
என்றார்.                                                   1

                      ஏவலர் வில்லினை அவைக்குக் கொண்டுவரல்
 
  

667.என்றனன். ஏன்று. தன்
   எதிர் நின்றாரை. ‘அக்
குன்று உறழ் வரி சிலை
   கொணர்மின். ஈண்டு’ என.
‘நன்று’ என வணங்கினர்.
   நால்வர் ஓடினர்;
பொன் திணி கார்முகச்
   சாலை புக்கனர்.
 
  

என்றனன்    - என்று கூறிய சனகன்; ஏன்று - தன் கட்டளையை
ஏற்று; எதிர் நின்றாரை- தனக்கு எதிரே நின்ற ஏவலாட்களை நோக்கி;
குன்று உறழ் வரிசிலை
- மலையைப் போன்ற அக்கட்டமைந்த  (சிவ)
வில்லை;  ஈண்டு  கொணர்மின்என  - இங்கே  கொண்டு வாருங்கள்
என்று  ஆணையிட; நால்வர் - அவர்களுள் நான்கு பேர்; நன்று என
வணங்கினர்   
-  நல்லது  என்று  கூறி  வணங்கிவிட்டு;  ஓடினர்  -
விரைவாகச் சென்று; பொன்திணி - பொன் இழைத்த; கார்முகச் சாலை
- அந்த வில் வைக்கப்பட்டுள்ள இடம்; புக்கனர் - சென்றார்கள்.

சிவதனுசை  அச் சிறுவர்க்குக் காட்டுமாறு அதனை அங்கே கொண்டு
வரச் சனகன் ஏலாட்களுக்குக் கட்டளையிட்டான்; அதனை மேற்கொண்ட
சிலர் அவ் வில் வைத்திருக்குமிடம்  சென்றார்கள்.  நன்று -  அரசனது
பணியை ஏற்று ஏவலாளர் கூறும் ஒரு மரியாதைச் சொல்.            2