பக்கம் எண் :

  கார்முகப் படலம்431

போதகம்:   இள வயதுடைய யானைக் கன்று. வில்லின் வரலாற்றைச்
சனகராசன்  கூறுவதாக  முதனூலில்  உள்ளது.  இங்கே    சதானந்தன்
உரைப்பதாக  அமைத்துள்ளார்.  தன்  மாதினை  நோக்குவான்  மனம்
என்றது தன் அருமைப் பெண் கன்னியாகவே  மூத்துக்  கழிய நேருமோ
என்ற மனக் கவலையைக் குறிக்கும்.                            11
   

677.‘இமைய வில் வாங்கிய ஈசன். “பங்கு உறை
உமையினை இகழ்ந்தனன் என்ன” ஓங்கிய
கமை அறு சினத்தன் இக் கார்முகம் கொளா.
சமை உறு தக்கனார் வேள்வி சாரவே.
 

இமையவில்- மேருமலையை வில்லாக; வாங்கிய ஈசன்- வளைத்த
சிவன்;  பங்கு உறை - (தன்) இடப்பக்கத்திலே வாழும்; உமையினை-
உமா   தேவியை;   இகழ்ந்தனன்  என்ன  -  (தந்தையான  தக்கன்)
அவமதித்தான் என்ற காரணத்தால்; ஓங்கிய - பொங்கியெழுந்த; கமை
அறுசினத்தன்   
-   பொறுமையற்ற  சினத்தை  யுடையவனாய்;  இக்
கார்முகம்  கொளா
-  இந்த வில்லை எடுத்துக்கொண்டு; சமை உறு-
நடந்து   கொண்டிருக்கின்ற;  தக்கனார்  வேள்வி  -  தக்கனது யாக
சாலையை; சார - (நோக்கிச்) சேர.

மந்தரம்.     இமயம்.    கைலாயம்    என்பவற்றை    மேருவுடன்
வேறுபாடின்றிக்   கூறுவது  நூல்  வழக்காகும்.  ‘இமயவில்    வாங்கிய
ஈர்ஞ்சடை அந்தணன்’ - கலித். 3.                             12
  

678.‘உக்கன பல்லொடு கரங்கள். ஓடினர்;
புக்கனர். வானவர் புகாத சூழல்கள்;
தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின;
முக் கண் எண் தோளவன் முனிவும் மாறினான்.

 
  

பல்லொடு    - (அவ்   வேள்விக்கு வந்த தேவர்களின்) பற்களும்;
கரங்கள்
-   கைகளும்;   உக்கன  -  கீழே  சிந்தின;  வானவர் -
(அல்லாமலும்)  தேவர்களில் சிலர்; ஓடினர் - ஓடி; புகாத சூழல்கள் -
அதுவரை  தாம்  சென்று  அறியாத இடங்களில்;  புக்கனர் - பதுங்கிக்
கொண்டார்கள்;தக்கன் நல்வேள்வியில் தழலும் - தக்கனின் வேள்விக்
குண்டங்களில் எழுப்பிய நெருப்பும்; ஆறின - ஆறிவிட்டன;  முக்கண்
எண்தோளவன்   
-   (இவ்வாறெல்லாம்   ஆன   பின்பே)   மூன்று
கண்களையும்   எட்டுத்   தோள்களையும்  உடைய  சிவன்;   முனிவு
மாறினான்
- (தன்) சினமும் தணிந்தான்.

பல் உக்கது - கதிரவனுக்கு.                                13