என் நெஞ்சு- எனது மனத்திலே; உலாவந்து - உலாவி வந்து; அங்கு - அந்த இடத்திலே; இயன்று - அச்செயலோடு பொருந்தி; அனங்கன் எய்த - மன்மதன் செலுத்திய; அம்பின் வந்த - அம்பினால் உண்டான; சிந்தைநோய்- மன நோயானது; பொங்குகின்ற - பெரிதும் வெளிப்படும் இடமான; கொங்கைமேல் - (என்) தனங்கள்மேல்; விடம் பொழிந்தது - நஞ்சினை ஊற்றியது; என்னினும் - என்றாலும்; கங்குல் வந்த - (இது) நேற்றிரவில் தோன்றி வருந்திய; திங்கள் அன்று - சந்திரன் அன்று; அகம் - (ஏனென்றால்) இதன் மத்தியில்; களங்கம் இல்லை - களங்கம் காணப்படவில்லை; இந்த இந்து - இந்தச் சந்திரன்; எங்கு நின்று - எங்கிருந்து; எழுந்தது - வந்ததோ? (தெரியவில்லை) உரு வெளிப்பாட்டில் இராமனது முகச் சந்திரன் தோன்ற அதனால் உண்டான துயரத்தைச் சீதை வெளிப்படுத்துகிறாள். அவள் முகச்சந்திரனைப் பார்த்து இது நஞ்சு பொழிந்ததனாலும் நடுவிலே களங்கத்தைப் பெறவில்லை ஆதலாலும் இது நேற்றிரவு தோன்றிய சந்திரன் அன்று; இந்தச் சந்திரன் இரவு அல்லாத இப்போது எவ்வாறு தோன்றியதோ என்று வருந்துகின்றாள். 51 |