விண்ணுள் - வானத்தில்; எழுந்த மேகம் - தோன்றிய மேகமானது; மின்னொடு - மின்னலுடன்; இம் மண்ணுள் - இந்த மண்ணுலகில்; இழிந்தது என்ன - இறங்கியது என்று சொல்லுமாறு; மார்பின் நூலின் - மார்பில் அணிந்துள்ள முப்புரி நூலுடன்; வந்துபோன - (கன்னிமாடத்தின் முன் என் கண்கள் காணுமாறு) வந்து சென்ற; மைந்தனார் - அப்பிரான்; எண்ணுளே - என் மனத்திற்குள்ளே; இருந்தபோதும் - நீங்காது இருந்தாலும்; யாவர் என்று - இவர் யாரென்று; தேர்கிலேன் - தெரிந்து கொள்ள முடியவில்லை; கண்ணுளே - (என்) கண்களுக்கு எதிரே; இருந்தபோதும் - காணப்பட்டாலும்; காண்கிலாதது - (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியாமல் இருப்பதற்குக் காரணம்; என்கொல் - என்ன? கண்ணிற்குள்ளே இருப்பவரை இன்னாரென்று காணாமையும் காலத்தாலும் இடத்தாலும் சேய்மையானவற்றையும் அறியவல்ல மனம் தன்னுள் இருப்பவரை இன்னாரென்று தெரியாமல் இருப்பதும் வியப்பானதே என்று சீதை கூறுகிறாள். பூணூல் தரித்த இராமனுக்கு மின்னலோடு கூடிய மேகம் உவமையானது. 53 |