பெய் கடல் பிறந்து - பல வளங்களும் நிறைந்த பாற்கடலிலே தோன்றி; அயல் பெறற்கு ஒணா - வேறிடத்தில் பெற முடியாத; மருந்து பெற்று - அமுதத்தைத் தம் நல்வினைப் பயனால் அடைந்தும்; ஐய பொன் கலத்தொடு - (அதனை உடனே பருகாமல்) அழகிய பொன்கலசத்தோடு; அம்கை விட்டிருந்து - தம் கையிலிருந்து அதனை நழுவவிட்ட; ஆதர்போல் - அறிவற்ற மூடர்களைப் போல; மொய் கிடக்கும் - வலிமை மிக்க; அண்ணல்தோள் - அப் பெருமானின் தோள்கள் (காணப் பெற்றும்); முன்னமே முயங்கிடாது - (கண்ட) அப்போதே தழுவிக் கொள்ளாமல்; கைக் கடக்க - கைநழுவிப் போகும்படி; விட்டிருந்து - விட்டொழித்துப் பின்; கட்டுரைப்பது - தனியிருந்து பலவாறாகக் கூறிப் புலம்புவது; என்கொல் - எதற்காக? அமுதம் கண்ணிற்பட்டால் உடனே அது நிறைந்துள்ள பொற்கலத்தைக் கைப்பற்றி உண்பது முறை. ஆனால். அப்படிச் செய்யாது கைநழுவவிட்ட மூடர்போல இராமனைக் கண்ணால் கண்டபோது நான் அவனைத் தழுவிக் கொள்ளாமல் விட்டுவிட்டு இப்போது பலவாறு பேசி என்ன பயன்’ என்கிறாள் சீதை. ஆதர் - அறிவில்லாதவர். 54 |