நெடுந் தடம் கிடந்த- பெரிய தடாகத்தில் கிடந்த;கண்நீலமாலை - குவளை போன்ற கண்களையுடைய நீலமாலை என்பவள்; வடங்களும் - (தன் கழுத்தில் பூண்ட) ஆரங்களும்; குழைகளும் - காதணியான குழைகளும்; வானவில் இட - வானவில்லைப் போலப் பல நிற ஒளிகளை வீசவும்; தொடர்ந்த பூங்கலைகளும் - உடுத்த உடையும்; குழலும் சோர்தர - மலரணிந்த கூந்தலும் அவிழ்ந்து சரியவும்; நுடங்கிய மின் என - துவண்ட மின்னல் போல; நொய்தின் எய்தினாள் - விரைவாக ஓடி வந்தாள். சீதைக்குத் திருமணம் நடக்குமாறு இராமன் வில் முறித்த செய்தியை விரைவில் தெரிவிக்க வேண்டுமென்ற ஆர்வத்தோடு சீதை இருக்குமிடம் வந்தாள் என்பது. தோழியின் பெயர் நீலமாலை. வானவில் இடுதல் - இந்திரவில்லின் தன்மையவாய்ப் பலநில ஒளி வீசுதல். ‘திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன்’ - சிலப். 15-156. 56 |