13. எழுச்சிப் படலம் படலத்தின் பெயரமைதி: தன் மைந்தர்களின் திருமணத்திற்காகத் தசரதன் மிதிலைக்குப் புறப்படுவதைத் தெரிவிக்கும் பகுதியாதலால் எழுச்சிப் படலம் எனப் பெயர் பெற்றது இப் படலம். படலச் செய்திச் சுருக்கம்: சனகன் அனுப்பிய தூதர் தசரதனிடம் செய்தியைத் தெரிவிக்கின்றனர். சனகனது ஓலையின் செய்திகேட்டுத் தசரதன் உவகையடைந்து. அத் தூதருக்கு அணிகலன் முதலிய வழங்குகின்றான். வள்ளுவன் அரசன் ஆணைப்படி மணமுரசு அறைய. நால்வகைப் படைகளும் எழுகின்றன. படைகளின் பயணம் தொடங்குகின்றது. பப்பரர் பாரம் சுமந்து செல்லுகின்றார். மகளிர் மனங் களித்து ஏகுகின்றனர். மங்கையர். ஆடவர் மகிழ்ந்து செல்லுகின்றனர். யானையின் வருகையைக் கேட்டு மகளிர் நிலைகெட்டு ஓடுகின்றார்கள். பாணரும் விறலியரும் இசை எழுப்புகின்றார்கள். தசரதனின் நேய மாதரும் பட்டத்து அரசியாரும் போகின்றார்கள். அப்பொழுது மெய்க்காப்பாளர் காவல் புரிகின்றார்கள். வசிட்டர் சிவிகையில் செல்ல. அவருக்குப்பின்னே பரதனும் சத்துருக்கனனும் செல்லுகின்றார்கள். யாவரும் சந்திர சயிலச் சாரலில் தங்குகின்றார்கள். சனகன் தூதர் தயரதனையடுத்துச் செய்தி தெரிவித்தல் |