திருவருள் முகந்தனர்- (வாயிலையடைந்த தூதர்) உள்ளே செல்ல அரசனது அருளைப்பெற்றவராய்; முறையின் எய்தினார் - அரசவையில் செல்ல வேண்டிய முறைப்படி அரசன் முன்பு சென்று; திகழ்ந்து ஒளிர் - மிக விளங்குகின்ற; கழல் இணை தொழுது - தசரத மன்னனின் அடிகளை வணங்கி; செல்வனைப் புகழ்ந்தனர் - அவ்வரசனைப் புகழ்ந்து; அரச - மன்னரே; நின் புதல்வர் - உன் மைந்தர்; போய பின் - (விசுவாமித்திரனுடன்) இங்கிருந்து சென்றபின்; நிகழ்ந்ததை - நடந்த செயல்; இது என - இதுவாகும் என்று; நெடிது கூறினார் - விரிவாகக் கூறினர். அரசவைக்கு அன்னிய நாட்டுத் தூதுவர் வருங்காலத்து வாயில் காப்பவர் ‘அரசனிடம் சென்று இந்த நாட்டுத் தூதுவர் வந்துள்ளார்’ என்று உணர்த்தி. அவனது உத்தரவின்படி உள்ளே விடுதல் மரபாகும். முறை: அரசவையில் செல்லும் தூதர்கள் அடக்கத்துடன் நிற்கும் முறைமையை உணர்த்தியது. செல்வனைப் புகழ்தல்: தூதர்கள் அரசனை வணங்கி எழுந்ததும் அவனைப்புகழ்தல் மரபாகும். 2 சனகனது ஓலையை வாசிக்கக் கேட்டுத் தயரதன் உவகை கொள்ளல் |