தேம் பொழி- தேனைச் சொரிகின்ற; துழாய்முடி - துழாய் மாலையணிந்த திருமுடியையும்; செங்கண் மாலவன் - சிவந்த கண்களையும் கொண்ட திருமால்; ஆம் பரிசு - (தன்) முறைமைக்கு ஏற்றவாறு; உலகு எலாம் - (சுவர்க்கம். மத்திமம். பாதாளம் என்ற) மூவுலகங்களையும்; அளந்து கொண்டநாள் - (தன் மூவடியால்) அளந்து கொண்ட காலத்தில்; சாம்புவன் - (அச்செய்தியை) சாம்பவான்; திரிந்து என - பறையறைந்து திரிந்தது போல; வாம்பரி - தாவிச் செல்லும் குதிரைகளாகிய; விரிதிரைக்கடலை - விரிந்த அலைகளையுடைய கடலுக்கு (சேனைக்கு); வள்ளுவன் - பறையறையும் வள்ளுவன்; திரிந்து சாற்றினான் - திரிந்து (முரசு அறைந்து) செய்தி தெரிவித்தான். வள்ளுவன் - முரசு அறைந்து செய்தி தெரிவிப்போன். மாலவன் உலகெலாம் அளந்து கொண்ட நாள் சாம்புவன் திரிந்தென வள்ளுவன் திரிந்து சேனைக் கடலுக்குக் கூறினான். தாவிச் செல்லும் குதிரைகளைக் கடல் அலைகளுக்கு ஒப்புக் கூறுதல் மரபு. 8 நால்வகைப் படைகளின் எழுச்சி |