முகிழ் மென் கொங்கை - தாமரை அரும்பு போன்ற மெல்லிய தனங்களை யுடையவரும்; செப்ப அரு திருவின் நல்லார் - சொல்ல முடியாத படி திருமகளைக் காட்டிலும் அழகுள்ளவர்களும்; முப்பதிற்று இரட்டி ஆயிரம் - அறுபதினாயிரம் என்னும் எண்ணை; கொண்ட - கொண்டவர்களும்; தெரிவையர் - ஆகிய மகளிர்; துப்பினின் - பவளங்களினாலும்; மணியின் - இரத்தினங்களினாலும்; பொன்னின் - பொன்னாலும்; சுடர் மரகதத்தின் - ஒளி விடுகின்ற மரகதத்தாலும்; முத்தின் - முத்துக்களாலும்; ஒப்பு அற அமைத்த - (தமக்கு வேறு பொருள்) நிகரில்லை என்னுமாறு இயற்றப்பட்டுள்ள; வையம் - வண்டியில்; ஓவியம் புகழ ஏறி - சித்திரம் புகழ்ந்து கூறுமாறு ஏறி; சூழப் போனார் - (அந்தக் கோசலையை) சூழ்ந்து சென்றார்கள். அறுபதினாயிர மங்கையர் பலவகை வண்டிகளில் ஏறிக் கொண்டு கோசலையைச் சூழச் சென்றார்கள் என்பது. 69 சிவிகையில் வசிட்டர் செல்ல. பரதசத்துருக்கனர் அவர்பின் போதல் |