இருபிறப்பாளர் எண்ணாயிரர் - எண்ணாயிரம் அந்தணர்கள்; மணிக் கலசம் ஏந்தி - இரத்தின கும்பங்களைக் கையில் ஏந்திக் கொண்டு; அருமறை - உணர்வதற்கு அரிய வேதமந்திரங்களின்; வருக்கம் ஓதி-தொகுதிகளை ஓதிக் கொண்டு; அங்கை நீர் தெளித்து - (தம்) கையால் கலச நீரைத் தெளித்து; வாழ்த்த - வாழ்த்துக் கூறவும்; மங்கல மழலைச் செவ்வாய் - மங்கலமான மழலைச் சொல்லைப் பேசும் சிவந்த வாயையும்; பருமணிக் கலாபத்தார் - பருத்த மாணிக்கங்களாலான மேகலையையும் உடையவர்களாகிய; வரன்முறை வந்தார் - பரம்பரையாக அரசருக்குப் பல்லாண்டு பாடும் குலத்தில் பிறந்தவர்களான; கோடி - கோடிக்கணக்கான பெண்கள்; பல்லாண்டு இசை பரவ - பல்லாண்டை இசையோடு பாடிவரவும்; போனான் - சென்றான். தசரதன் செல்லும்போது அந்தணர் வேத மந்திரங்களைச் சொல்லிக் கலச நீர் தெளித்து வாழ்த்த. மங்கையர் பலர் பல்லாண்டு பாடினர். இரு பிறப்பாளர் - உபநயனத்திற்குமுன் ஒரு பிறப்பும். உபநயனத்தின்பின் ஞானப் பிறப்பான மற்றொரு பிறப்பும் ஆகிய இரு பிறப்புடையவர் அந்தணர். மணிக் கலசம் - பூரண கும்பம் - மங்கலத்திற்காகப் பூரண கலசம் எடுத்தல் மரபு. 73 |