பக்கம் எண் :

504பால காண்டம்  

வந்திருந்த    மண்டல    அரசர்கள்    ஒவ்வொருவரும்   இவ்வாறு
கூறிக்கொண்டே வந்து தசரதனை நெருங்கினர் என்பது.           74
 

806.

பொற்றொடி மகளிர் ஊரும்
   பொலன் கொள் தார்ப் புரவி வெள்ளம்.
சுற்றுறு கமலம் பூத்த
   தொடு கடல் திரையின் செல்ல.
கொற்ற வேல் மன்னர் செங் கைப்
   பங்கயக் குழாங்கள் கூம்ப
மற்று ஒரு கதிரோன் என்ன.
   மணி நெடுந் தேரில் போனான்.

 

பொன்  தொடி  மகளிர் - பொன் வளையல் அணிந்த பெண்கள்;
ஊரும் - ஏறிச் செல்லும்; பொலன் கொள் - பொன்னாலாகிய; தார்ப்
புரவி  வெள்ளம்
 - கிண்கிணி மாலையணிந்த குதிரைகளின் கூட்டம்;
சுற்று  உறு   கமலம்   -  சுற்றிலும்  தாமரைப்  பூக்கள்;  பூத்த  -
மலர்ந்துள்ள; தொடுகடல்  -  தோண்டப்  பெற்ற கடலின்; திரையின்
செல்ல
 -  அலைகளைப்  போலச்  செல்ல;  கொற்றவேல் மன்னர் -
வெற்றி  பொருந்திய  வேல்  ஏந்திய அரசர்களின்; செங்கை பங்கயக்
குழாங்கள்
 -  சிவந்த  கைகளாகிய  தாமரைக்  கூட்டங்கள்; கூம்ப -
குவிய; மற்றொரு கதிரோன்  என்ன - வேறொரு சூரியனைப் போல;
மணி நெடுந் தேரில்- மணிகள் கட்டிய பெரிய தேரிலே; போனான் -
ஏறிச் சென்றான் (தசரதன்).

இயற்கைக்கு  மாறாகத் தாமரை குவியச் செய்தலானும். மண்ணிடைச்
செல்லுதலானும்  மற்றொரு  கதிரோன்  என்றார்.  தாமரை  மலர்களை
மலர்விக்கும்   சூரியனைவிட   வேறுபட்டுத்   தாமரை   மலர்களைக்
குவிக்கும்   ஒரு   சூரியன்  இத்தசரதனுக்கு  ஒப்பாகும்  என்றார்.  -
வேற்றுமையணி.   மகளிரையுடைய  புரவி  வெள்ளம்   கமலம்  பூத்த
கடலின்  அலைக்கு  உவமையாயிற்று.  கமலம்  பூத்த  கடல் திரை -
இல்பொருள் உவமை.                                      75
 

807.

ஆர்த்தது. விசும்பை முட்டி;
   மீண்டு. அகன் திசைகள் எல்லாம்
‘போர்த்தது; அங்கு ஒருவர்தம்மை
   ஒருவர் கட்புலம் கொளாமை
தீர்த்தது; செறிந்தது ஓடி.
   திரை நெடுங் கடலை எல்லாம்
தூர்த்தது. சகரரோடு
   பகைத்தென. - தூளி வெள்ளம்.