திரண்ட தாள்- திரண்ட அடிப்பகுதியையும்; நெடுஞ் செறி பணை - நீண்ட செறிவான கிளைகளையும் உடைய; மருது - இரட்டை மருத மரங்கள்; இடை ஒடிய - நடுவே முறிந்து விழும்படி; புரண்டு பின் வரும் - புரண்டு (தன்) பின்னே வருகின்ற; உரலொடு - உரலுடன்; போனவன்போல - (அம் மரங்களின் இடையே) தவழ்ந்து சென்ற கண்ணன் போல; ஓர் யானை - ஒரு யானையானது; உருண்டு கால் தொடர் - உருண்டவாறு தன் பின்னங்கால்களின் ஊடே தொடர்ந்து; பிறகிடு - வருகின்ற; தறியொடும் - கட்டுத் தறியோடும்; ஒருங்கு இரண்டு - ஒருசேர இரண்டு; மாமரம் இடை இற - மாமரங்கள் (தம்முடைய) நடுப்பகுதி முறிந்து விழும்படி; நடந்தது - நடந்து சென்றது. யசோதையால் உரலில் கட்டப்பட்ட கண்ணன் அந்த உரலோடு அருகில் இருந்த இரட்டை மருத மரங்களிடையே செல்ல அம் மரங்கள் முறிந்து வீழ்ந்தன என்பது வரலாறு. தன்னைக் கட்டியிருந்த கட்டுத்தறியை இழுத்துக் கொண்டு விரைந்து செல்லுகையில் அக் கட்டுத் தறியால் இரண்டு மாமரங்கள் முறிந்துவிழச் செய்தது ஒரு யானை. இதற்குத் தன் தாயால் கட்டப்பட்ட உரலை இழுத்துச் செல்லுகையில் இரட்டை மருத மரங்களை முறித்த கண்ணனை உவமையாக்கினார் - உவமையணி. 3 |