காட்டு இன மயில்கள் - காட்டில் வாழும் மயில் கூட்டங்கள்; கொவ்வை நோக்கிய வாய்களை - கோவைப் பழம் போன்ற மகளிரின் வாய்களை; இந்திர கோபம் - இந்திர கோபப் பூச்சிகள்; கவ்வி நோக்கின - சென்று சேர்ந்து அடைக்கலமாகப் புக்கனவோ; என்று கொல் - என்று நினைத்ததால்தானோ; நலம் கொள் மேகலை - அழகிய மேகலையை அணிந்த; நவ்வி நோக்கியர் - மான் போன்ற கண்களைப் பெற்ற பெண்களின்; பொலஞ் சாயல் செவ்வி - சிறந்த சாயல் அழகை; நோக்கின - (எவ்வாறு உள்ளதென்று) பார்த்தவாறு; திரிவன போல; திரிந்த - திரிந்தன. மகளிரின் வாய்கள் இந்திர கோபப் பூச்சிகள் போலிருத்தல் கண்ட மயில்கள் இவர்களின் சாயல் எவ்வாறு உள்ளது என்று காணுதல் பொருட்டும் தம் உணவான இந்திரகோபமோ என்று ஐயுற்றும். திரிவன போன்று இருந்தன. இந்திர கோபம்: செம்பட்டுப் பூச்சி. - ஏதுத் தற்குறிப்பேற்ற அணி. மயில் மகளிர்க்குச் சாயலில் உவமை கூறப்படுவது வழக்கமாதலால். வாய்களைப் பற்றிக் கருதிய மயில்கள் சாயல் அழகைக் கருத்தோடு நோக்கத் திரிந்தன என்றார். வேறு உரை: தாம் கவர வேண்டுமென்று கொவ்வைப்பழம் கருதியிருந்த பெண்களின் செவ்வாய் அழகை இந்திர கோபப் பூச்சிகள் கவர்ந்துள்ளன என்று காட்டு மயில்கள் கருதியதால்தானோ அந்த இந்திரகோபங்களை உண்ண விரும்பித் தாம் அதற்காகத் திரிவது தோன்றாதவாறு அப்பெண்களின் சாயல் அழகைக் காணத் திரிவன போலத் திரிந்தன என்பது. 9 |