மின்னொடும் பிறங்கிய- மின்னல்களோடு விளங்கிய; மேகங்கள் - மேகங்கள்; ஆ இடை - அந்தச் சந்திர சயில மலைப் பக்கத்தில்; படி புக்காலென - பூமியில் சேர்ந்தாற் போல; பிடி புக்குப் படிதர - பெண்யானைகள் படிந்து நிற்க (அவற்றின் மேல் ஏறியிருந்த); கொடி அன்ன மடவார் - பூங்கொடி போன்ற மகளிர்; துடி புக்கா இடை - உடுக்கையை உவமையாகக் கூறப்பெறும் வெல்லும் இடை உடைய; திருமகள் தாமரை துறந்து - இலக்குமி தாமரை மலரை விட்டு; குடி புக்கால் என - (அங்கே) குடி புகுந்தாற் போல; பரிபுரம் புலம்ப - (தம் கால்களின்) பாதச் சிலம்புகள் ஒலிக்கவும் (நடந்து); குடிபுக்கார் - (தத்தம் விடுதிகளில்) குடி புகுந்தார்கள். பெண் யானைகளின் மேல் ஏறிவந்த சில பெண்கள் அவை பூமியில் படிந்திருக்க. அவற்றிலிருந்து இறங்கிச் சென்று ஒரு சூழலில் குடிபுகுந்தனர் என்பது. மகளிரைத் தாங்கிய பெண்யானைகளுக்கு மின்னலைத் தாங்கிய மேகங்கள் உவமை. 12 |