பக்கம் எண் :

518பால காண்டம்  

உண்  அமுதம்  ஊட்டி  -  உண்பதற்குரிய  உணவை  வாயினுள்
ஊட்டி;  இளையோர் நகர் கொணர்ந்த  -  இளைஞர்களால்  நகரில்
கொண்டு  வரப்பட்டனவும்;  துண்ணெனும்  முழக்கின  -  திடுக்கிடும்
கனைப்பொலியையுடையனவும்; துருக்கர் தரவந்த - சோனகர் கொண்டு
வந்தனவுமான;  பண் இயல் - அலங்காரம் அமைந்த; வயப் பரிகள் -
வலிய  குதிரைகளை;  மண்மகள்  தன்  மார்பின்  -  பூமி தேவியின்
மார்பில்; அணி வன்ன சரமென்ன - அணிந்த பல நிறமுள்ள நவமணி
மாலை  போல; பந்தியின்  -  குதிரைக்  கூட்டத்தில்;  நிரைத்தார் -
ஒழுங்காகக் கட்டினார்கள்.

பல     நிறத்தோடு  கூடிய  குதிரைகள் வன்னசரம் போன்றுள்ளன.
சோனகரால்  ஏற்ற  உணவளித்து  வளர்க்கப்பட்ட  குதிரைகள்  அங்கு
வந்தன என்பது.                                            13
 

826.

நீர் திரை நிரைத்த என. நீள் திரை நிரைத்தார்;
ஆர்கலி நிரைத்த என. ஆவணம் நிரைத்தார்;
கார் நிரை என. களிறு காவிடை நிரைத்தார்;
மாருதம் நிரைத்த என. வாசிகள் நிரைத்தார்;
 

நீர்     திரை   நிரைத்த   என  -   நீரலைகளை   ஒழுங்காக
அமைத்தாற்போல;   நீள்   திரை  நிரைத்தார்  -  நீண்ட  (சுற்றுத்)
திரைகளை  வரிசையாகக்  கட்டினார்கள்;  ஆர்கலி  நிரைத்த  என -
கடல்கள் ஒழுங்காக அமைக்கப்பட்டன போல; ஆவணம் நிரைத்தார் -
கடைத்  தெருக்களை  வரிசையாக   அமைத்தனர்;  கார் நிரையென -
மேகங்களின்  வரிசை  என்று   சொல்லும்படி;  களிறு  கா இடை  -
யானைகளைச்  சோலைகளின்  இடையே;  நிரைத்தார்  -  வரிசையாக
நிறுத்தினர்;  மாருதம்  நிரைத்த என - காற்றை ஒழுங்காக நிறுவினாற்
போல; வாசிகள் நிரைத்தார் - குதிரைகளை வரிசையாகக் கட்டினர்.

தனித்     தனியே  தங்கியிருக்கப்  பட மாடங்கள் கட்டப்படுவதும்.
வேண்டிய  பண்டங்களை  வாங்குவதற்குக்  கடைவீதிகள்  அமைப்பதும்
சேனைகளுக்கு    இன்றியமையாதன.     உடன்     வந்த    யானை
குதிரைகளையும்   அவ்வவற்றிற்கு   உரிய   இடங்களில்  வரிசையாகக்
கட்டினர்.                                                  14

                           மைந்தரும் மங்கையரும் திரிந்த காட்சி
 

827.

நடிக்கும் மயில் என்ன வரும் நவ்விவிழியாரும்.
வடிக்கும் அயில் வீரரும். மயங்கினர் திரிந்தார்;
இடிக்கும் முரசக் குரலின். எங்கும் முரல் சங்கின்.
கொடிக்களின் உணர்ந்து. அரசர் கோநகர் அடைந்தார்.
 

நடிக்கும்   மயில்  என்ன - ஆடும் மயிலைப் போல;  வரும்  -
வருகின்ற; நவ்வி விழியாரும் - மான் போன்ற கண்களையுடைய