பக்கம் எண் :

  வரைக்காட்சிப் படலம்531

குவளை   மலர்   போன்ற;   கண்  மலர்  -  கண்களையும்  பெற்ற
முகத்தாமரையையுடைய;     கொடிச்சிமார்க்கு    -    குறிஞ்சிநிலப்
பெண்களுக்கு;   கணித்   தொழில்   புரியும்-  சோதிடத்   தொழில்
புரிந்துவரும்; வேங்கை உண்மலர் - வேங்கை  மரத்தின் தேனையுண்ட
மலர்களின் மேல்; வெறுத்த தும்பி - வெறுப்புற்ற கருவண்டுகள்; புதிய
தேன் உதவும்
- புதிய தேனைத் தருகின்ற; நாகம் தண் மலரென்று -
சுரபுன்னை   மலரென்று   கருதி;  வானத்  தாரகை  -  விண்ணிலே
விளங்குகின்ற நடசத்திரங்களின் மேல்; தாவும் - தாவுகின்றன.

வேங்கை     நன்னாளில்  மலர்தலும்.  அந்த  நாளில் மலைமகளிர்
மணம்  புரிதலும்.  அது பூத்தபோது  மகளிர்  தினைப் புனங் கொய்யத்
தொடங்குதலும்    வழக்காதலின்    அவ்     வேங்கை    சோதிடரை
ஒப்பதாயிற்று.  ‘மலரின்  தேனைக்  குடித்ததால்  தேன்  நீங்கிய  அந்த
வேங்கை   மலரை  வெறுத்தது   தும்பி;  பின். வானத்திலே விளங்கும்
விண்மீன்களைக்   கண்டு  அவற்றைச்   சுரபுன்னை   மலராக  மயங்கி
அவற்றின்மேல்   தாவியது   என்றார்.   மயக்கவணியை   அங்கமாகக்
கொண்டு   வந்த   தொடர்புயர்வு   நவிற்சியணி.  கணி:   முகூர்த்தம்
அறிவிப்பவன்.                                              3
 
 

846.

மீன் எனும் பிடிகளோடும்
   விளங்கும் வெண் மதி நல் வேழம்
கூனல் வான் கோடு நீட்டிக்
   குத்திட. குமுறிப் பாயும்
தேன் உகு மடையை மாற்றி.
   செந் தினைக் குறவர். முந்தி
வான நீர் ஆறு பாய்ச்சி.
   ஐவனம் வளர்ப்பர் மாதோ!

 

மீன்     எனும் பிடிகளோடும் - நட்சத்திரங்களாகிய (தன்) பெண்
யானைகளுடனே;  விளங்கு வெண்மதி - விளங்கும் வெண்ணிறமுள்ள
சந்திரனாகிய;நல்வேழம்  -  சிறந்த யானை; கூன் நல் வான்கோடு -
வளைவும்  அழகுள்ள  வெண்கொம்புகளை; நீட்டிக்  குத்திட - நீட்டிக்
குத்தியதனால்    (அவற்றிலிருந்து);   குமுறிப்   பாயும்   தேன்   -
பேரொலியோடு   பாய்கின்ற  தேனினது;  உகு  மடையை  மாற்றி  -
பாய்கின்ற  மடையைத்  தடுத்து;  செந்தினைக்  குறவர் - செந்தினைக்
கொல்லைகளையுடைய   மலைக்  குறவர்கள்;  முந்தி  வானம் ஆறு -
விரைவாக  ஆகாய  கங்கையின்;  நீர்பாய்ச்சி - நீரைப் பாயச் செய்து;
ஐவனம் வளர்ப்பர்
- மலை நெல்லை வளரச் செய்வார்கள்.

தேன்   வெள்ளத்தால் தினை விளைவதற்கு முன் அதனைத் தடுத்து
உலர்ந்த   ஐவன  நெல்லை ஆற்றுநீர்  கொண்டு மலைக் குறவர் மாற்றி
விளைத்தனர்     என்பது   -    தொடர்புயர்வு   நவிற்சியணி.   இவ்
வருணனையால்    மலையின்   ஓங்கிய    தன்மையும்.   மலைவளனும்
பெறப்படும்.                                               4