பக்கம் எண் :

  வரைக்காட்சிப் படலம்533

அலகிலே     ஊட்டப்பெற்ற   கொடிய   நச்சு   நீரையும்;  நெய்யும்
உண்கிலாது  
-  நெய்யையும்  கொள்ளாமலே;  ஆவி  உண்ணும்  -
(காதலித்த ஆடவரின்) உயிரைப் பறிக்கவல்ல; கொதி நுனை வேல்கண்
-  கொதிக்கும்   முனையுள்ள   வேலைப்  போன்ற  கண்களையுடைய;
மாதர்   குறத்தியர்  நுதலினோடு   
-   அழகிய  மலை  மகளிரின்
நெற்றியோடு;  குறவர்  மதியினை  வாங்கி  - குறவர்கள் (அம் மலை
மேல  செல்லமுடியாத)  சந்திரனை  எடுத்து;  ஒப்புக்  காண்குவர்  -
ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.

குறவர்கள்     அருகிலுள்ள   பிறைச்  சந்திரனைப்  பிடித்துத் தம்
மனைவியரின்    நெற்றியோடு     ஒப்பிட்டுப்    பார்த்து   ஒற்றுமை
காண்பார்கள்   என்பது   -  தொடர்புயர்வு   நவிற்சியணி.   வேலைக்
கூர்மைப்படுத்த   கொல்லனது   உலைக்   களத்தில்   காய்ச்சியடிக்கப்
பெறுகிறது.   துருப்பிடியாமலிருக்க   நெய்   பூசப்படுகிறது.  பகைவரது
உயிரைக்  கொள்ள   நஞ்சு  தீற்றப்படுகிறது.  இத்தகு   இயல்புகளோடு
கூடிப்   பகைவரது   உயிரையுண்ணும்    வேலைப்    போல.  இந்தக்
கண்ணாகிய  வேல்  எந்தச் செயலும்  வேண்டாமல்  ஆடவரது உயிரை
உண்ணவல்லதென்று வேறுபாடு காட்டியது - வேற்றுமையணி.        6
 

849.

பேணுதற்கு அரிய கோலக்
   குருளை. அம் பிடிகள் ஈன்ற
காணுதற்கு இனிய வேழக்
   கன்றொடு களிக்கும் முன்றில்.
கோணுதற்கு உரிய திங்கட்
   குழவியும். குறவர்தங்கள்
வாள் நுதல் கொடிச்சி மாதர்
   மகவொடு. தவழும் மாதோ!

 

அம்  பிடிகள்  ஈன்ற  -  அழகிய பெண் யானைகள் பெற்றெடுத்த;
காணுதற்கு  இனிய வேழக் கன்றொடு
- காண்பதற்கு இனிய யானைக்
கன்றுகளோடு;   முன்றில்  பேணுதற்கு   அரிய   -  (குடிசைகளின்)
முற்றகளிலே பேணி வளர்த்தற்கு அரிய; கோலக் குருளை களிக்கும் -
அழகிய    சிங்கக்     குட்டிகளும்     மனமகிழ்ந்து     விளையாடும்
(அல்லாமலும்); கோணுதற்கு உரிய - வளையும் தன்மை  கொண்டுள்ள;
திங்கள்  குழவியும்
- இளஞ்சந்திரனும்; குறவர் தங்கள் வாள்நுதல் -
குறவர்களின்  ஒளி  பொருந்திய  நெற்றியையுடைய;  கொடிச்சி மாதர்
மகவொடு  
-  (மனைவியரான)   குறத்தியர்  பெற்ற  குழந்தைகளோடு;
தவழும்
- தவழ்ந்து விளையாடும்.

யானைக்     கன்றோடு   சிங்கக்  குருளைகள்  களிக்கும்  எனவும்.
இளஞ்சந்திரனும்   குறத்தியர்    குழந்தைகளோடு    தவழும்  எனவும்
கூறினார்.  நிலத்தின்  தன்மையால்   இயற்கைப்  பகையாயினவும்  அப்
பகைமை  ஒழிந்து  நட்புப்  பூண்டு   ஒழுகின  என்பதை   உணரலாம்.
கோலக் குருளை: அழகிய சிங்கக்குட்டி.                          7