திமிர மா உடல் - இருள் போன்ற கரிய நிறமுடைய காட்டுப் பன்றிகள் (தம்) உடலிலே; குங்குமச் சேதகம் - மகளிர் ஊடலில் அழித்தெறிந்த குங்குமச் சேறு; திமிர - நிரம்பியதனால்; மாவொடும் சந்தொடும் - (அச் சேறு நீங்கும்படி) மாமரத்திலும். சந்தன மரத்திலும்; தேய்க்கும் - (தம் உடம்பை) உராயச் செய்யும்; அமரர் மாதரை - (அந்த இடத்தில்) தேவ மாதரை; ஒத்து ஒளிர் அம் சொலார் - ஒப்ப விளங்கும் இனிய சொல்லையுடைய மகளிர்; அமர மா தாரை - பொருந்தியிருப்பதால் அந்தப் பெரிய மலை நிலமானது; அவ் வானமே ஒத்தது - தெய்வப் பெண்கள் தங்கும் அந்த வானுலகம் போன்றது. கரும் பன்றி தன் உடலில் பட்ட குங்குமச் சேற்றைப் போக்குவதற்காக மாமரத்திலும் சந்தன மரத்திலும் தேய்க்கும். தேவ மங்கையரை ஒத்த பெண்கள் அங்கு வாழ்வதால் அம் மலை தேவருலகம் போன்று இருக்கும் என்பதாம். 26 |