பக்கம் எண் :

546பால காண்டம்  

870.

புகலும் வாள் அரிக்கு அண்ணியர் பொன் புயம்.
புகலும். வாள் அரிக் கண்ணியர் பூண் முலை.
அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே!
அகிலும். ஆரமும் மாரவம் கோங்குமே.

 

புகலும்     வாள்  அரிக்கு - சிறப்பித்துச் சொல்லும் வாள்போல்
கொடிய சிங்கத்தையொத்த;  அண்ணியர் பொன்புயம் - ஆடவர்களின்
அழகிய  தோள்களில்;  வாள் அரிக் கண்ணியர் - ஒளிமிக்க செவ்வரி
பரந்த  கண்களையுடைய  பெண்களின்;  பூண் முலை - பூண் அணிந்த
தனங்கள்;  புகலும் - சேர்ந்த அளவில்; அகிலும் ஆரமும் - (மார்பில்
அணிந்த) அகில் குழம்பும்  சந்தனக் குழம்பும்; ஆர அங்கு ஓங்கும் -
நிறைந்து அத்தோள்களில்  சிறப்பாக விளங்கும்; அகிலும் - (புயத்திற்கு
ஒப்பான)  அம்   மலையிடங்களிலும்;  ஆரமும்  மாரவமும் - சந்தன
மரங்களும்.  குங்கும  மரங்களும்;  கோங்கும்  - கோங்கு  மரங்களும்
(பொருந்தியிருக்கும்).

மாதர்    தம் கணவரைத் தழுவுகையில் அவர்கள் அணிந்த அகிலும்
ஆரமும்  ஆண்களின்  தோள்களில்  சேர்ந்து  மிகச் சிறக்கும் என்பது.
வேறு  உரை:  வாள்  அரிக்  கண்ணியர்: ஒளி  பொருந்திய வண்டுகள்
மொய்க்கும்  மாலை  சூடிய  வீரர்  என்றும்   உரைக்கலாம்.   மரவம்:
குங்கும மரம். மாரவம் - நீட்டல் விகாரம்.                      28
 

871.

துன் அரம்பை நிரம்பிய. தொல் வரை.
துன் அரம்பையர் ஊருவின் தோன்றுமால்;
கின்னரம் பயில் கீதங்கள் என்ன. ஆங்கு.
இன் நரம்பு அயில்கின்றனர். ஏழைமார்.
 

தொல் வரை - பழைய அந்த மலையில்; துன் அரம்பை நெருங்கி
வளர்ந்த வாழைகள்; நிரம்பிய
- நிரம்பியவை; துன்னு அரம்பையர்-
(அங்கு)  வந்துள்ள  தெய்வப்  பெண்களின்;  ஊருவின் தோன்றும் -
தொடை  போலத்   தோன்றுவன  (அங்கு);  ஏழைமார்  -  மாதர்கள்;
கின்னரம்  பயில்  
-  கின்னரம்  என்ற  தேவ  சாதியார்  பாடுகின்ற;
கீதங்கள்  என்ன
 -   இனிய  பாடல்  என்று  சொல்லும்படி  (அந்த
மலையில்);    இன்   நரம்பு   -   யாழினை;    அயில்கின்றனர்-
மீட்டுகின்றார்கள்.

மகளிரின்     தொடைக்கு    உவமையாகும்.    வாழை    இங்கே
உவமேயமாகவும்.   தொடை   உவமானமாகவும்   சொல்லப்பெற்றன  -
எதிர்நிலையுவமையணி.                                       29
 

872.

ஊறு. மா கடம் மா. உற ஊங்கு எலாம்.
ஊறுமா கட மா மதம் ஓடுமே;
ஆறு சேர் வனம் ஆ. வரை. ஆடுமே;
ஆறு சேர்வன. மா. வரையாடுமே.