மீன் நாறு வேலை - மீன்களின் புலால் நாற்றம் வீசும் கடலானது; ஒரு வெண்மதி - வெண்ணிறமுள்ள ஒரு சந்திரனை; ஈனும் வேலை - பெறுங் காலத்தில்; அதனை நோனாது - அந்தச் செயலைப் பொறுக்காமல்; அனீக வேலை- சேனைக் கடலானது; வான் நாடியரின் பொலி - வானுலக மகளிரைப் போல விளங்கும்; மாதர் முகங்கள் என்னும் - பெண்களுடைய முகங்கள் என்று சொல்லப்படுகின்ற; நுவலற்கு அருங் கோடி வெள்ளம் - அளவிட்டுச் சொல்ல முடியாத கோடி வெள்ளக் கணக்கான; ஆனா மதியங்கள் - கலை குறையாத முழுமையான சந்திரர்களை; மலர்ந்தது - பெற்றது. கடல் ஒரு சந்திரனை ஈன்றது கண்டு பொறாமை கொண்டு சேனைக் கடலானது மாதர் முகங்கள் என்ற பல சந்திரர்களைப் பெற்றது என்பது - ஏதுத் தற்குறிப்பேற்றவணி. சேனைக் கடலுக்கு மீனையுடைய கடலை விட மேன்மை தோன்றுவதற்காக வேறுபாடு கூறியது - வேற்றுமையணி. 43 கூத்தர் ஆடலும் மகளிர்கோலமும் |