முறை எலாம் முடித்த பின்னர் - நாட்கடமைகளையெல்லாம் (செய்து) முடித்த பின்பு; மன்னனும் மூரித் தேர்மேல் - தசரதச் சக்கரவர்த்தியும் வலிமை வாய்ந்த (தன்) தேர்மேலே; இறை எலாம் வணங்கப் போனான் - (உடன்வந்த) மன்னர்கள் அனைவரும் வணங்கப் புறப்பட்டான்; உடன் எழு சேனைவெள்ளம் - அவனுடன் புறப்பட்ட படைத் தொகுதியும்; குறை எலாம் சோலை ஆகி - (தான் சென்றடையாத) ஆற்றிடைக் குறைகளையெல்லாம் மலர்ச் சோலையாகச் செய்தும்; குழிஎலாம் கழுநீர்ஆகி - தான் சென்ற பள்ளங்களையெல்லாம் செங்கழுநீர் மலர்க்கூட்டம் ஆகச் செய்தும்; துறை எலாம் கமலம் ஆன - (மக்கள் இறங்கும்) நீர்த்துறைகளையெல்லாம் தாமரை பூத்த தடாகங்கள் ஆகச் செய்தும் உள்ள; சோணையாறு அடைந்து - சோணையாற்றினை சென்றடைந்தது. “முறையெல்லாம் முடித்த பின்னர்” என்பதனால் எந் நிலையிலும் தசரத வேந்தர் முறை வழாதவர் என்பது குறித்தவாறு. முறை: அன்றன்று முடிக்க வேண்டிய கடமைகள். “குழி எலாம் கழுநீர்” (கம்ப. 33) என வேறிடத்தும் குறிப்பார். ஆற்றினிடையே நீர் மூழ்காத இடம் ஆற்றிடைக் குறை எனவும். அரங்கம் எனவும் பெயர் பெறும். ஆறு உலகை அழகுக் குவியலாக மாற்றுகின்ற ஒன்று ஆதலால். “குறையெலாம் சோலை ஆகி. குழியெலாம் கழுநீர் ஆகித் துறையெலாம் கமலம் ஆன சோணையாறு” என்றார். இறுதியிரண்டடியில் |