அவண் அடைந்து இறுத்த பின்னர் - அச்சோணை யாற்றின் கரையில் அச்சேனைக் தொகுதி தங்கிய பின்பு; அருக்கனும் உம்பர்ச் சேர்ந்தான் - சூரியனும் வான் மேல் ஏறினான்; மடந்தையர் குழாங்களோடும் - (தத்தம்) மனைவியர் கூட்டங்களோடு; மன்னரும் மைந்தர்தாமும் - அரசர்களும் இளவரசர்களும்; வண்டு குடைந்து உறையும் மென்பூக் கொய்து - வண்டுகள் துளைத்துத் திளைக்கும் மெல்லிய மலர்களைப் பறித்து; நீராட - (நீரில்) மகிழ்ந்து விளையாட; மைதீர் தடங்களும் மடுவும் - தூய தடாகங்களும் மடுக்களும் சுற்றியுள்ள; தண் நறுஞ் சோலை சார்ந்தார் - குளிர்ச்சியும் மணமும் மிக்க சோலையினை அடைந்தனர். வண்டுகள் மலரைக் குடைந்து தேன் ஆடல் கண்டு இவர்களும் தடாகங்களைக் குடைந்து நீராடும் நினைவுற்றனர். என்பது குறிப்பு. தடம்: அகன்று பெரிதான நீர்நிலை. மடு: ஆழ்ந்து சிறிதான நீர்நிலை. நீராடுங்காலை. மலர்களைப் பறித்து வந்து. ஒருவர் மேல் ஒருவர் இலக்குத் தவறுதல் இன்றி வீசி விளையாடுதல் நீர் விளையாட்டு எனத் தெரிகிறது. 3 மாதரைக் கண்ட மயில் முதலிய பறவைகள் |