நஞ்சினும் கொடிய நாட்டம் - (விரும்பாதார்க்கு) நஞ்சினைக் காட்டிலும் கொடுமையைச் செய்ய வல்ல (தம்) விழிகளைக்கொண்டு (அம் மகளிர்); அமுதினும் நயந்து நோக்கி - (அவை நஞ்சல்ல) அமுதினை விட நல்லவை என்று கூறுமாறு விருப்பத்தோடு பார்த்து; செஞ்செவே கமலக் கையால் தீண்டலும் - (தமது) செக்கச் செவேர் என்று சிவந்த தாமரைக் கைகளால் தீண்டிய அளவில்; நீண்ட கொம்பும் - நீண்டு வளர்ந்து நின்ற பூங்கொடிகள் (எல்லாம்); தம் சிலம்பு அடியில் மென்பூ - அவர்களுடைய சிலம்பணிந்த பாதங்களில். மெல்லிய பூக்களை; சொரிந்து உடன் தாழ்ந்த என்றால் - சொரிந்த வண்ணம் வணங்கி நின்றன என்றால்; வஞ்சி போல் மருங்குலார்மாட்டு - வஞ்சிக்கொடி போன்று (ஒல்கி ஒசியும்) இடையினையுடைய மகளிரிடத்தே; யாவர்தம் வணங்கலாதார்? - வணங்காமல் நிற்பார் (இவ்வுலகில்) யாரே உளர்? (ஒருவரும் இலர்). மகளிர் தீண்டலால். ஓரறிவுடைய மலர்க்கொடிகளும் தாழ்ந்து வணங்கி மலர்களைச் சொரிந்தன என்றால். ஆறறிவுடைய ஆடவர் வணங்கித் தாழ்வர் என்பது கூற வேண்டா என்றவாறு. மகளிர் நோக்கவும் தீண்டவும் செய்யின் மரங்கள் பூச் சொரிவனவாகக் கூறல் கவிமரபு. “நித்தில முலையினார் தம் நெடுங்கணால் நோக்கப்பெற்றும். கைத்தலம் தீண்டப் பெற்றும் கனிந்தன மலர்ந்த காண்க. வைத்து அலர் கொய்யத் தாழ்ந்த மரம்” (சீவக. 1907) என்பார் திருத்தக்கதேவரும். “பாவையர் கை தீண்டப் பணியாதார் யாவரே?” பூவையர் கை தீண்டலும் அப்பூங்கொம்பு - மேவியவர் பொன்னடியில் தாழ்ந்தனவே” (நளவெ. 2 : 5) எனும் பாடல் அப்படியே இதனை அடியொற்றியது. “வஞ்சி போல் மருங்குலார் மட்டு யாவரே வணங்கலாதார்” என்பதனால் வளையும் இடையுடைய மெல்லிய பெண்மை. வளையாத் திறலுடைய வலிய ஆண்மையை. தன் மென்மையால். அன்பால். பாசத்தால். தியாகத்தால் வளைத்து விட வல்லது என்னும் வாழ்வியல் நுட்பம் கூறப்பட்டுள்ள திறம் காண்க. 7 |