அம்புயத்து அணங்கின் அன்னார் - தாமரை மலரில் வாழும் திருமகளைப் போன்ற (அழகிய) அம்மகளிரின்; அம்மலர்க்கைகள் தீண்ட - அழகிய அம் மலர் அனைய கரங்கள் தீண்டியவுடன்; வம்பியல் அலங்கல் பங்கி - மணம் பொருந்திய மாலைகளையணிந்த மயிர்முடியினையும்; வாள் அரி மருளும் கோளார்தம் - வாள் போன்று பாயும் கொடுமையினையுடைய சிங்கங்களும் அஞ்சும் வலிமையினையும் உடைய ஆடவர்கள் தம்முடைய; புய வரைகள் வந்து தாழ்வன - மலையனைய தோள்கள் அம்மகளிரின் முன் வந்து தாழ்ந்து வணங்கி நிற்பன (என்றால்); தளிர்த்த மென்பூங்கொம்புகள் - (மெல்லிய) தளிர்களையும் மெல்லிய பூக்களையும் உடைய பூங்கொடிகள்; தாழும் என்றல் - அம் மகளிர் தீண்டியவுடன் தாழ்கின்றன என்பது; கூறலாம் தகைமைத்து ஆமோ? - சிறப்பாக எடுத்துக் கூறத்தக்கதோ? ‘மலர்க்கைகள் தீண்டப் புய வரைகள் தாழ்வன’ என்று. மலர்களின் முன் மலைகள் வீழ்ந்து கிடக்கும் வியப்புக் கண்டு கூறியவாறு. மேற் பாடலில் மகளிர்க்கு அஃறிணைகளே வணங்குகின்றன; உயர்திணைகளைப்பற்றிக் கூறவேண்டுமோ என்றவர். இப்பாடலில் உயர்திணைகளே வணங்குகையில் அஃறிணைகளைப்பற்றிக் கூற வேண்டுமோ என மாற்றிக் கூறிச் சுவையூட்டினார். ஆகவே. இருதிணை யுயிர்களும் மகளிரை வணங்கும் என்பது தெளிவாயிற்று. 8 வண்டுகள் மொய்த்தல் |