மதி நுதல் வல்லி - பிறை போன்ற நெற்றிகொண்ட பெண்கள் என்னும் கொடிகள் (ஒவ்வொன்றும்); நதியினும் குளத்தும் பூவா - ஆறுகளிலும் குளங்களிலும் பூக்க இயலாத; குவளையோடு நளினங்கள் - (இரு) குவளை மலர்களோடு கூடிய தாமரை மலர் ஒன்றை (த்தம்மிடத்தில்); பூப்ப நோக்கி - பூத்திருப்பதைக்கண்டு; மழலைத்தும்பி - இன்னொலி மிழற்றும் வண்டுகள்; அதிசயம் எய்திப்புக்கு வீழ்த்தன - ஒரு கொடியில் வேறொரு பூவும். அப்பூவில் வேறு இன்னோர் இனமலர்களும் பூத்திருக்கும் அதிசயத்தைக்கண்டு. அவற்றின் மேல் வீழ்ந்து மொய்த்தன; அலைக்கப் போகா - (கைகளினால்) ஓட்டவும் (அவை) போகவில்லை. (?ஏனெனில்) ; புதுமை பார்ப்பார் - புதுமை நாட்டமுடையோர்; புதியன கண்ட போழ்து விடுவரோ? - புதுமைப் பொருள்களைக் காண நேர்கையில் (எளிதில்) விட்டுவிடுவார்களோ? (விடார் என்க). கொடியனையர் பெண்கள் - அக்கொடிகளில் தாமரை பூத்திருப்பது போன்றவை அவர்கள் முகங்கள். அந்தத் தாமரையில் குவளைகள் பூத்திருப்பது போன்றவை அவர்கள் விழிகள். ஒரு கொடியில் இருவகை மலர்கள் பூப்பது புதுமையாதலால். வண்டினங்கள் ஓட்டவும் போகாது. பெண்டிர் முகத்தை மொய்த்த வண்ணம் இருந்தன. அன்றன்று பூத்த புதுமலர்களை நாடுவது வண்டுகளின் இயல்பாதலால் அவற்றைப் “புதுமை பார்ப்பார்” எனல் பொருந்தும். இயல்பான நதியிலும் குளத்திலும் இவ்வதிசய மலர்கள் பூவா என்பார். “நதியினும் குளத்தும் பூவா” என்றார். நிலத்துக் கொடிகள் நீர்ப் பூக்களைப் பூப்பதும். தாமரைகள் குவளைப் பூக்களைப் பூத்திருப்பதும் வியப்பின்மேல் வியப்பாயின. “வாவி விரி தாமரையின் மாமலரில் வாசக் காவிரி நாண்மலர் முகிழ்த்தனைய கண்ணார்”. (கம்ப. 1849) என்பார் வேறிடத்தும். வேற்றுப்பொருள் வைப்பணி. கவிஞர்க்குள்ள புதுமை நாட்டத்தை வண்டின் மேல் வைத்து வெளிப்படுத்தியவாறு. 9 மலர் கொய் மகளிர் செயல்கள் |