‘உள்ளத்து ஊக்கம் உடைய - (தவம் புரிவதில்) மனத்தில் ஊக்கம் (மிகக்) கொண்ட; முனிவரால் - முனிவர்களிடத்தில்; காமன் கை வில் காக்கல் ஆவது எனும் - காமன் வில்லின் ஆற்றலைக் காக்கத் தக்க ஆற்றல் உண்டு என்று (உலகில்) சொல்லப்படுகின்ற; வாக்குமாத்திரம் அல்லது - வாய்ச் சொல்மட்டும் (பிரபலமே) யன்றி (உண்மையை ஆராய்ந்தால் அம்முனிவர்களின் ஆற்றலைப் பொடியாக்குதற்கு); வல்லியில் பூக்கொய்வாள் - பூங்கொடிகளிலிருந்து பூக்களைக் கொய்யும் ஒருத்தியின்; புருவக் கடைபோதும் - புருவத்தின் நுனிப் பகுதியின் கடைப் பார்வையே போது மானதாகும். முனிவரால் - உருபு மயக்கம். “கண்களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின் செம்பாகம் அன்று பெரிது” (திருக். 1092) ஆதலின். முனிவர்களின் தவமுயற்சியை யழிக்கப் புருவ வில்லை மகளிர் முழுதும் வளைக்கத் தேவையின்றிக் கடைப்பகுதியின் வளைப்பே போதுமென்பார். “புருவக்கடை போதுமே” என்றார் - ஏ- அசை. “கறையடிக் களி யானையின் வரவினைக் கண்டு. மறுகின் உற்றவர் இரிதர மணி மருங்கிடல் போல். உறு தவத்தினர் அறிந்தனர் ஓட ஒண்ணுதற்கு. நறு மலர்ப் பதத்து அணிந்தனள் சிலம்பு ஒரு நங்கை” (பிரபு. லீலை) எனும் பாடல் ஒப்பு நோக்கற்பாலது. 35 |