சினையின் மேல் இருந்தான் - (ஒரு மரத்தின்) கிளையின் மேல் (மலர் பறிக்கச்) சென்றிருந்த கணவன்; தேவரால் வனையவும் அரியாள் வனப்பின் தலை - தேவர்களாலும் வரைய இயலாத (ஓவிய) உருவினையுடைய (தன்) மனையாளின் அழகின்மேல்; நினைவும் நோக்கமும் நீக்கலன் - தான் வைத்த மனத்தையும் கண்களையும் நீக்க இயலாதவன் ஆனால்; கைகளால் நனையும் நாள் முறியும் - (மனத்தின் வழியே உறுப்புகள் செயல்படும் ஆதலால்) தன் கைகளால். பூ அரும்புகளையும் புதிய தளிர்களையும்; கொய்து நல்கினான் - கொய்து (அவள்மேல்) இட்டவண்ணம் இருந்தான். மாலை தொடுக்க மலர்களைக் கொய்து திரட்டிவரச் சென்றவன். வைத்த கண் வாங்காமல் தன் மனையாளையே நினைந்து. பார்த்தவண்ணமாய். செயல் மறந்து. கொய்த மலர்களையும் தளிர்களையும் அவள் மேல் இட்டு அர்ச்சித்த வண்ணம் இருந்தான் என்பதாம். “உடல் சிந்தை வசம் அன்றோ?” (கம்ப. 1150) என்பார் மேலும். நினைவு - ஆகுபெயர். 37 |