பக்கம் எண் :

  நீர்விளையாட்டுப் படலம்587

17. நீர்விளையாட்டுப் படலம்

மகளிரும்   மைந்தரும் நீர்விளையாடலைக் கூறும் பகுதி. ஆடவரும்
மகளிரும்   தழுவியும்   புலந்தும்.   நீரினை   இறைத்தும்.  இன்பத்தை
நிறைத்தும்   புனல்விளையாடினர்.   அவர்களின்   உடலில்   கமழ்ந்த
மணத்தால்.    நீர்நிலைகளிலிருந்த    மீன்களும்    மணம்   பெற்றன.
குளித்தெழுந்த     மகளிர்      சாணைபிடித்த      மணிகளைப்போல்
காட்சிதந்தனர்.  அவர்கள்   நீர்நிலைகளிலிருந்து  வெளியேறிய  பின்பு.
தாமரைப்  பூக்கள்  எல்லாம்  குடிபோய்விட்டன   போல்.  தடாகங்கள்
பொலிவிழந்து  போயின.  அப்போது.  கதிரவன்  மறைந்தான்;  திங்கள்
எழுந்தது.

                            நீர்நிலை நோக்கி மகளிரும் மைந்தரும்

அறுசீர் விருத்தம்
 

929.

புனை மலர்த் தடங்கள் நோக்கி.
   பூசல் வண்டு ஆர்த்துப் பொங்க.
வினை அறு துறக்க நாட்டு
   விண்ணவர் கணமும் நாண.
அனகரும். அணங்கனாரும்.
   அம் மலர்ச் சோலைநின்று.
வன கரி பிடிகளோடும்
   வருவன போல வந்தார்.

 

அனகரும்     அணங்கு அ(ன்)னாரும் -  குற்றமற்ற  ஆடவரும்
தெய்வமகளிர்  போன்ற  பெண்டிரும்;  வினையறு  துறக்க  நாட்டு -
வினை  (த்  துன்பம்)  அற்ற  சுவர்க்க  நாட்டில்  உள்ள; விண்ணவர்
கணமும்  நாண  
- தேவர் இனமும் (இவர்களுடைய  அழகைக் கண்டு)
வெட்கி  நாணம் கொள்ளுமாறு;  பூசல்  வண்டு ஆர்த்துப் பொங்க -
ஆரவாரம்    செய்யும்     குணம்கொண்ட     வண்டுகள்   ஒலித்துப்
பொங்கியெழ;     அம்   மலர்ச்   சோலைநின்று    -    அந்தப்
பூஞ்சோலையிலிருந்து;   புனைமலர்த்  தடங்கள்நோக்கி  -  அழகிய
மலர்க்குளங்களை நோக்கி; வனகரி பிடிகளோடு -  வனங்களில் வாழும்
ஆண்  யானைகள்.  (தங்கள்) பெண் யானைகளோடு;  வருவன என்ன
வந்தார்
- வருதலைப் போல வந்தார்கள்.